You are here
Home > Uncategorized > புதிய நிபுணர்குழு:மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்

புதிய நிபுணர்குழு:மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்

சென்னை முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு செய்வதற்காக புதிய குழுவை மத்திய அரசு நியமித்திருப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான, மத்திய அரசின் அறிவிப்பாணையைத் திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ‘முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நில நடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்ற எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்களை வகுப்பதற்காக தனியான குழு ஏற்படுத்தப்படும் என்று தங்களுடைய (பிரதமர்) தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான அலுவலகக் குறிப்பாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை கேரள அரசின் செயல்பாடுகளுக்குப் பலியாவது போலாகிவிடும். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், அணையை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள அதிகாரம்
அளிக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது.

உச்ச நீதிமன்றம் உத்தரவு: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக, கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, பல்வேறு நிபுணர்களின் கருத்துகளை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அணையின் நீர்மட்ட அளவை 142 அடிக்கு உயர்த்த தமிழகத்துக்கு அனுமதி அளித்தனர்.

மேலும், உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள அதிகாரம் அளிக்கப்பட்ட குழு, அணை தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அந்தக் குழு தனது அறிக்கையை வரும் பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், அணையில் பாதிப்புகள் ஏற்படும் எனக்கூறி அதைச் சமாளிப்பதற்கான திட்டங்களை வகுக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை கேரளம் நாடியிருக்கிறது. இதன்மூலம், அணை பாதுகாப்பில்லை என்கிற கற்பனையான கருத்தை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் மீது திணிக்க கேரள அரசு முனைகிறது.

திரும்பப் பெற வேண்டும்: ரூர்கி ஐ.ஐ.டி.யில் உள்ள நிலநடுக்கப் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் டி.கே.பாலை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பான வழக்கில் சாட்சியாகச் சேர்க்க வேண்டும் என்கிற கேரளத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தேசித்துள்ள நிபுணர் குழுவில் பால் இடம்பெற்றுள்ளார். அவருடைய நிரூபிக்கப்படாத கருத்துகள் பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுவின் நிபுணர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும்.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், அணையை ஆய்வு செய்திட அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் தனியாக ஒரு குழுவை அமைப்பது தேவையற்றது.

எனவே, குழுவை அமைப்பதற்காக கடந்த 12-ம் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள
கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

Top