You are here
Home > Uncategorized > பிரதமருக்கு செல்ஃபோனும், இ-மெயிலும் இல்லாததால் அமெரிக்கா உளவு பார்க்கும் கவலை இல்லையாம்!

பிரதமருக்கு செல்ஃபோனும், இ-மெயிலும் இல்லாததால் அமெரிக்கா உளவு பார்க்கும் கவலை இல்லையாம்!

புதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செல்போன் இல்லை, இ-மெயில் இல்லை; அதனால் அவரை அமெரிக்கா உளவு பார்க்கும் என்ற கவலை இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ‘கார்டியன்’ நாளிதழ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில், “35 உலக நாட்டு தலைவர்களின் தொலைபேசி எண்களை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, வெளியுறவுத்துறை, இராணுவத் தலைமையகமான பென்டகன் ஆகியவை அந்நாட்டு உளவு அதிகாரிகளிடம் வழங்கின. இதைத் தொடர்ந்து, அந்தத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை உளவுத்துறை அதிகாரிகள் ஒட்டுக் கேட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க அரசு ரகசியங்களை அம்பலப்படுத்தி வரும் எட்வர்டு ஸ்நோடென் அளித்த ஓர் ஆவணத்தின் அடிப்படையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டதாக கார்டியன் தெரிவித்தது. உலக நாடுகளின் தலைவர்களது தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பான இச்செய்தி, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தமது தகவல் தொடர்புகள் இவ்வாறு ஒட்டுக் கேட்கப்பட்டதற்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கோபத்துடன் கண்டனம் தெரிவித்தார். இதனிடையே, பிரதமர் மன்மோகன் சிங்கின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

இது தொடர்பாக பிரதமர் கவலை அடைந்துள்ளாரா என்று பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, “பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செல்போன் இல்லை, இ-மெயில் இல்லை. அவரது அலுவலகம் இ-மெயிலைப் பயன்படுத்துகிறது. ஆனால் அவருக்கு என்று தனிப்பட்ட இ-மெயில் ஏதுமில்லை. அதனால் அவரை அமெரிக்கா உளவு பார்க்கும் என்ற கவலை இல்லை” என்று பதிலளித்தார்.

Leave a Reply

Top