You are here
Home > Uncategorized > பாப்புலர் ஃப்ரண்ட் மாநாட்டுக்கு செல்ல விடாமல் தடுத்த போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு: டி.ஜி.பி. பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பாப்புலர் ஃப்ரண்ட் மாநாட்டுக்கு செல்ல விடாமல் தடுத்த போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு: டி.ஜி.பி. பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாநாட்டுக்கு செல்ல விடாமல் தடுத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் டி.ஜி.பி. பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் பாலக்கரையைச் சேர்ந்தவர் ஷஃபியுல்லா. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் திருச்சி மாவட்ட செயலாளராக இருந்து வரும் இவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் அமைப்பின் சார்பில் சிறுபான்மையின, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். எங்கள் அமைப்பு உருவாக்கப்பட்ட தினத்தை ‘யூனிட்டி மார்ச்‘ என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட முடிவு செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ந் தேதி பாலக்கரையில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டோம்.

ஆனால், எடத் தெருவில் பொதுக்கூட்டம் மட்டும் நடத்த அனுமதி அளித்தனர். சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி பேரணிக்கு அனுமதி மறுத்தனர். இந்த நிலையில் 16.2.2013 அன்று பாலக்கரை போலீசார், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பீமா நகருக்கு சென்று அங்குள்ள முஸ்லிம்களிடம் யார், யார் ‘யூனிட்டி மார்ச்‘ நிகழ்ச்சிக்கு செல்கிறார்கள் என்று குற்றவாளிகளை விசாரிப்பது போன்று விசாரித்தனர்.

அதே போன்று அரியமங்கலம், கொளக்குடி பகுதியிலும், திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் தங்கி உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியிலும் விசாரித்து உள்ளனர். மேலும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எதிர்காலம் பாதிக்கும் என்றும் போலீசார் மிரட்டி உள்ளனர்.

மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருவாரூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்தவர்களையும் போலீசார் தடுத்தனர். வாகனத்தின் டிரைவர், உரிமையாளரின் பெயரை கேட்டு மிரட்டி உள்ளனர். மேலும், அன்றைய தினம் கடை உரிமையாளர்களை மிரட்டி கடைகளை பூட்ட போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட திருச்சி நகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ், போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் (பாலக்கரை), உமா சங்கர் (கண்டோன்மென்ட்), தினேஷ் குமார், மயில்சாமி (காந்தி மார்க்கெட்) சப்இன்ஸ்பெக்டர்கள் அண்ணாத்துரை (அரியமங்கலம்), பாண்டியன் (திருச்சி கே.கே. நகர்), முருகன் (கே.கே. நகர்), ஜெயசித்ரா (தொட்டியம்), ஏட்டுக்கள் சாமிநாதன், ஸ்ரீனிவாசன், கிளமென்ட் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு மனு கொடுத்தேன்.

ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் கொடுத்த மனு அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.எம்.ஏ. ஜின்னா ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

Leave a Reply

Top