You are here
Home > கட்டுரைகள் > பொது கட்டுரைகள் > பாபரி மஸ்ஜித்: என்றும் நம் நினைவில்!

பாபரி மஸ்ஜித்: என்றும் நம் நினைவில்!

இந்து மதவெறியர்களால் 1992 டிசம்பர் ஆறு அன்று பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. ஆட்சியைப் பிடித்த இந்து மதவெறியர்கள் 2002இல் குஜராத்தில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தும், அதையே இந்துத்துவாவின் பரிசோதனைச் சாலை என்று பெருமை பேசுவதையும் பார்த்திருக்கிறோம்.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்தான் எத்தனை கலவரங்கள், குண்டு வெடிப்புகள்! இந்து மதவெறியர்கள் அதிகார அமைப்புகளின் உதவியோடு கலவரம் செய்வதோடு இன்று அவர்களே குண்டு வைக்குமளவு முன்னேறி விட்டார்கள்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக தேசத்தின் விவாதப் பொருளாக இருந்து வரும் இந்து மதவெறி பல பிரச்னைகளை திசை திருப்புவதற்கும் பயன்படுகிறது. காங்கிரசுக்குப் போட்டியாக ஏகாதிபத்திய விசுவாசத்தில் கொடி கட்டிப் பறக்கும் இந்து மதவெறியர்கள் மறுகாலனியாக்கத்தை அவர்களது ஆட்சியின் போது தீவிரமாக அமல்படுத்தினர்.

பாபரி மஸ்ஜித் தொடர்பாக அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்து மதவெறியருக்கு ஆதரவாகவே இருந்தது. தீர்ப்பு நீதியின் அடிப்படையில் அல்ல. மறுபுறம் மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸ் முதலான கட்சிகள் மிதவாத இந்துத்வத்தை பின்பற்றுவதையும் நாம் கண்டிருக்கிறோம்.

வெறுமனே மஸ்ஜித் இடிப்பது மட்டுமல்ல, அனைத்து துறையிலும் இந்து ராஷ்டிர திட்டத்தை வைத்திருக்கும் இந்து மதவெறியர்கள் இன்றும் அரசியல் ரீதியான செல்வாக்கோடுதான் உள்ளனர்.

அயோத்தி பாபரி மஸ்ஜிதை இடித்துத் தரைமட்டம் ஆக்கியதோடு நாடு முழுவதும் மதவெறிப்படுகொலைக் கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம் தங்களது நயவஞ்சகச் சதித் திட்டத்தை வெற்றிகரமாகத் துவக்கினார்கள் இந்துமதவெறி பாசிசக் கூட்டத்தினர்.

பாபரி மஸ்ஜிதை இடித்ததானது, “இந்துமத-வகுப்புவாதத் தீவிரவாதிகளது வெறிச்செயல்”, “வக்கிரமான கோழைத்தனம்”, “மத்திய கால மதவெறிக் குரூரம்”, “தேசிய அவமானம்-துரோகம்”, “மன்னிக்க முடியாத கிரிமினல் குற்றம்” – என்று சித்தரிப்பது எல்லாம் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நாசகரமான கடப்பாரைச் சேவையை மட்டும் குறிக்கின்றன.

ஆனால் இந்த இழி செயல் இந்துமதவெறி பாசிச பயங்கரவாத ஆட்சியை நிறுவுவது என்கிற மிகவும் அபாயகரமான, நயவஞ்சகமான, கொடிய சதித் திட்டத்தைப் பகிரங்கமாக அரங்கேற்றுவதைத்தான் குறிக்கிறது.

பாபரி மஸ்ஜிதின் கவிகைகளை உடைத்து நொறுக்கி வீழ்த்தியவுடன் இந்து மத “சந்நியாசினிகள்” என்று பட்டஞ் சூட்டிக் கொண்டுள்ள உமா பாரதியும், ரிதம்பராவும் ஒலிபெருக்கி மூலம் அலறினார்கள்: “இதோ இந்து ராஷ்டிரம் பிறக்கிறது!” – இதுதான் அவர்கள் இலட்சியம்.

இந்துமதவெறியின் குரு பீடமாகிய ஆர்.எஸ்.எஸ்.ஸோ அதன் கள்ளக் குழந்தைகளான பாரதீய ஜனதா, விசுவ இந்து பரிஷத், சிவசேனா, பஜ்ரங்க் தள், இந்து முன்னணி முதல் தமிழ்நாடு பிராமணர் சங்கம் வரை அவர்கள் யாருமோ “இந்துராஷ்டிரம்”தான் தமது இலட்சியம் என்பதை மறைக்கவில்லை.

பாபரி மஸ்ஜிதை இடித்து, அந்த இடத்தில் ராமனுக்கு கோவில் கட்டுவது ஒரு மத நம்பிக்கையை நிறைவேற்றுவது என்பதெல்லாம் பாமர ராம பக்தர்களைத் திரட்டுவதற்காகச் செய்த பிரச்சாரம்தான்!

“இஸ்லாமிய ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்களால் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன; இந்துக்கள் இழிவு படுத்தப்பட்டனர்; இந்துமதத் துறவிகள் கொல்லப்பட்டனர்; இந்த தேசிய அவமானத்தின் சின்னமாக விளங்குவதுதான் பாபரி மஸ்ஜித்; அதை அகற்றி ராமன் பிறந்த பூமியில் ராமனுக்குக் கோவில் கட்டுவது அன்று நேர்ந்த அவமானங்களுக்குப் பழி வாங்குவது, இந்துக்களின் கௌரவத்தை நிலை நாட்டுவது” என்கிற விளக்கங்கள் கூட இந்துமதவெறி பாசிஸ்டுகள் தமது “இந்து ராஷ்டிரம்” என்கிற அரசியல்பேராசைக்கு மதச் சாயம் பூசுபவைதான்.

“இராமன் ஒரு மதத்தின் கடவுள் மட்டுமல்ல; தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். போலியான மதச்சார்பின்மை, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இந்துத்துவம், இராம ராஜ்ஜியம், இந்து ராஷ்டிரம் அடிப்படையிலான தேசியத்தை நிர்மாணிப்பது எங்கள் நோக்கம்” என்று இந்து மதவெறி பாசிஸ்டுகள் அனைவரும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்.

ஆகவே, பாபரி மஸ்ஜிதை இடித்த சம்பவம் உண்மையில் அரசியல் அதிகார ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையைப் போன்றது. பாரதீய ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போல தேர்தல் ஆதாயம் மட்டும் அதன் குறிக்கோள் அல்ல. ஆட்சியைப் பிடிப்பதற்குத் தேர்தல்களையும் ஒரு வழியாக இந்துமதவெறி பாசிஸ்டுகள் பயன்படுத்திக் கொண்டார்கள்.

நாட்டின் நீதி-நிர்வாக-அரசியல் அமைப்புமுறை எதன் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது என்பதை நிரூபித்துவிட்டார்கள். மதவெறி பாசிச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு இரத்த ஆறில் நீந்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் தெரிந்தெடுத்துக் கொண்டுள்ள வழி. அதன் ஒரு பகுதிதான் அயோத்தியில் அவர்கள் புரிந்த அராஜக வெறியாட்டம்.

இந்துமதவெறி பாசிஸ்டுகளின் அயோத்தி நாசவேலையைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விட்ட அராஜக வெறியாட்டத்தில் இலக்கு என்னவோ முஸ்லிம் சமுதாயத்தினர்தான்! ஆனால், நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக, தேசபக்த சக்திகளுக்கெதிராக அவர்கள் தமது தாக்குதலைத் திருப்பி விடும் நாள் வெகு தொலைவில் இல்லை. இன்றைய சம்பவங்கள் அதற்கான எச்சரிக்கை – முன்னறிவிப்புதான்!

ஜெர்மனியின் ஆரிய – நாஜிக்கள் ஆட்சியைப் பிடிப்பதற்குப் பின்பற்றிய தந்திரங்கள் பலவும் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நடவடிக்கைகளில் காண முடிகிறது. தேசிய அவமானத்துக்கு பழி வாங்குவது; தேசிய கௌரவத்தை நிலைநாட்டுவது; தேசிய ஒருமைப்பாட்டை காப்பது; நாட்டின் இழிநிலைக்குக் காரணமானவர்கள் என்று ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது பழி போட்டு அவர்களை ஒன்று குவிப்பது; நாட்டின் வரலாற்றையே திரித்துப் புரட்டி மத-இன ரீதியில் நாட்டையே பிளவு படுத்துவது – ஆகிய அதே தந்திரங்களை இந்துமதவெறி பாசிஸ்டுகளும் பின்பற்றுகிறார்கள்.

இப்போது பாபரி மஸ்ஜிதை இடித்து ராமன் கோவிலைக் கட்டியதைப் போல காசியில் உள்ள மஸ்ஜிதை இடித்துக் காசி விசுவநாதன் கோவிலையும், மதுரா மஸ்ஜிதை இடித்து கிருஷ்ணன் கோவிலையும் கட்டும் திட்டத்தை நிறைவேற்றி அடுத்தடுத்து முஸ்லிம்களுக்கு ஆத்திரமூட்டுவது; சொல்லப்படும் மதச்சார்பற்ற அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை இழந்து எதிர் தாக்குதல் தொடுக்கும் படி முஸ்லிம்களைத் தள்ளுவது; அதற்கு எதிராக இந்து மதவெறியை நியாயப்படுத்துவதுடன் நாட்டின் பெரும்பான்மையினரான இந்துக்களின் ஏகப் பிரதிநிதியாகத் தம்மை முன்னிறுத்தி மதவெறி – வகுப்புவாதக் கலவரங்களை மூட்டி இரத்த ஆறு ஓடச் செய்து பார்ப்பன-பனியா சாதிய ஆதிக்க அடிப்படையிலான இந்து ராஷ்டிரம் அமைப்பது – இதுதான் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் அரசியல் பாதையாக உள்ளது.

முதலாவதாக, இவர்கள் நாட்டின் பெரும்பான்மையினரான இந்துக்களின் பிரதிநிதிகளும் அல்ல; இரண்டாவதாக, தேசிய நலன்கள் எதுவும் இவர்களது குறிக்கோளாகவும் இல்லை.

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., வி.எச்.பி., பஜரங் தள், சிவசேனா, இந்து முன்னணி போன்ற இந்த இந்துமதவெறி பாசிச அமைப்புகள் அனைத்திற்கும் தலைமையேற்று வழி நடத்துபவர்கள் பெரும் முதலாளிகளின் குடும்பத்தினர். தொழில்முறை அரசியல்வாதிகளாகவும், சாமியார்களாகவும், முன்னாள் அதிகாரிகளாகவும் உள்ள சாதியக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.

இந்தச் சாதிகளும் அமைப்புகளும் நாட்டின் பெரும்பான்மையான இந்துக்கள் எனச் சொல்லப்படும் பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களை ஒரு போதும் இந்துக்களாகவும் சமமான சமூக – மத உரிமை உடையவர்களாவும் நடத்தியதே கிடையாது.

சதி முதலிய பெண்ணடிமைத்தனமும், பார்ப்பனிய சநாதன வருணாசிரம – சாதிய தர்மமுமே இந்தக் கும்பலின் கண்ணோட்டமாக உள்ளது.

இந்து ராஷ்டிரம் எத்தகையதாக இருக்கும் என்பதை இந்துமதவெறி பாசிஸ்டுகள் இப்போதே நிரூபித்து விட்டார்கள். பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலும், நாடு முழுவதும் சிறுமான்மையினர் உயிரோடு எரிக்கப்படுவதும் இதற்கு சான்றுகளாக விளங்குகின்றன.

ஆட்சியாளர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் உண்மை என்று எழுதவும் பேசவும் முடியும்; அதுதான் இராம ராஜ்ஜியத்தில் கருத்துச் சுதந்திரம். சிறுபான்மையினருக்கு சமூக, மத, பண்பாட்டு உரிமைகள் மட்டுமல்ல, வாழும் உரிமையே மறுக்கப்படும் என்று காட்டி விட்டார்கள்.

ஆதிக்கத்தை, அதிகாரத்தை கைப்பற்றவும் காப்பாற்றிக் கொள்ளவும் பஞ்சமா பாதகங்களைச் செய்வது குற்றமல்ல என்று இந்த இந்துமதவெறி பாசிஸ்டுகளின் மூதாதையர்களும் ஆசான்களுமான மனுவும், கௌடில்யனும் போதித்தார்கள். அதையே அவர்களின் சந்ததியினர் இப்போது கடைப்பிடித்துள்ளனர்.

நாட்டின் சட்டம் ஒழுங்கையும், நீதியையும் வழுவாது கடைப்படிப்போம் என்று வாக்களித்து, நாட்டையும் மக்களையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்டார்கள். வேறெதையும் விட இந்த நம்பிக்கைத் துரோகத்துக்காவது தண்டிக்கப்பட வேண்டிய, இல்லை, இல்லை பழி வாங்கப்பட வேண்டிய கொடிய எதிரிகளாக இவர்களை நாடும் மக்களும் கருத வேண்டும்.

“பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்திரவை பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றிய படி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக் கூட இல்லை. மாலை 4.40க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலீசு கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்க முடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்து கொண்டு அதனை வணங்கினேன்.”

– பாபரி மஸ்ஜிதுக்குள் 1949இல் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை, இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்திரவை 1986இல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், 1991இல் வெளியிட்ட தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ள சம்பவம் இது.

செப், 30, 2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூரையிலும் நிச்சயமாக அந்தக் கருங்குரங்கு இருந்திருக்க வேண்டும் என்பதை தீர்ப்பிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் குரங்குகளின் எண்ணிக்கை ஒன்றா மூன்றா என்ற தெய்வீக உண்மை, பின்னாளில் இந்த நீதிபதிகள் சுயசரிதை எழுதும்போதுதான் நமக்குத் தெரியவரும்.

“ஒரு குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தமானது” என்று தீர்மானிப்பதற்கான உரிமை மூல வழக்கில், பட்டா பத்திரம் போன்ற சான்றாதாரங்களைச் சார்ந்து நிற்காமல், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் இராமன் பிறந்ததாக இந்துக்கள் நம்புவதால், அவர்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் அந்த இடத்தை இராம பிரானுக்குச் சொந்தமாக்குவதாகத் தீர்ப்பளித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

ஒரு உரிமை மூல வழக்கில் மனுதாரரின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு சொத்துரிமை வழங்க முடியுமா என்பதுதான் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக எழுப்பப்படும் மையமான கேள்வி. மனுதாரரின் நம்பிக்கை கிடக்கட்டும். நீதிபதியின் நம்பிக்கைதான் 1986 தீர்ப்பையே தீர்மானித்திருக்கின்றது என்பதையல்லவோ குரங்கு கதை நமக்குக் காட்டுகிறது!

அலகாபாத் தீர்ப்புக்கு முன் இந்துக்களின் நம்பிக்கையாக மட்டுமே இருந்த இராமஜென்மபூமி, சட்ட அங்கீகாரம் பெற்று விட்டதாகவும், இத்தீர்ப்பின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டுக்குப் புதியதொரு அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார் அத்வானி.

“இதுதான் இராமன் பிறந்த இடம் என்று நிரூபிக்கும் பட்சத்தில், அந்த இடத்தை விட்டுக் கொடுத்து விடுவதாக வக்பு வாரியம் ஏற்கெனவே கூறியிருந்தது. இதோ இன்று நிரூபிக்கப்பட்டு விட்டது. அவர்களுடைய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. வக்பு வாரியம் தனது வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும். அந்த இடத்தின் மீதான தனது கோரிக்கையைக் கைவிட வேண்டும்” என்று மிரட்டினார் பிரவீன் தொகாடியா.

“அயோத்தியில் இராமனுக்கு பிரம்மாண்டமானதொரு ஆலயம் அமைக்கும் பணியில் இந்துக்களுடன் கைகோர்த்து நிற்க முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இரு சமூகங்களும் இணைந்து வலிமையான இந்தியாவைக் கட்டி எழுப்புவதற்குக் கிடைத்திருக்கும் இந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று முஸ்லிம் சமூகத்தை இந்து தேசியத்துக்கு அடிபணிந்து விடுமாறு அறிவுரை கூறினார் அசோக் சிங்கால்.

அலகாபாத் உயர்நீதிமன்றம் தற்போது ஒதுக்கியிருக்கும் மூன்றில் ஒரு பங்கு நிலத்தையும் இந்துக்களிடம் ஒப்படைத்து விட வேண்டுமாம். இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாதாம். முஸ்லிம்களின் உள்ளத்தில் இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கும் காயத்தின் மீது உப்பை வைத்துத் தேய்த்துக் கொண்டே, பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டது இந்து மதவெறிக் கும்பல்.

“சுமுகமான தீர்வு வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினால், நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள இயலும்” என்று பா.ஜ.க.வின் கருத்தையே வேறு வார்த்தைகளில் சொன்னார் காங்கிரஸ் கட்சியின் சத்யவிரத சதுர்வேதி.

1992 இல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது மஸ்ஜிதை மீண்டும் கட்டித் தர வேண்டும் என்று கூறிய தி.மு.க., இத்தீர்ப்பை விமர்சித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

ஸித்தீக்

Leave a Reply

Top