You are here
Home > Uncategorized > இந்தியா > நான் ஒருபோதும் மோடியை மன்னிக்கவே மாட்டேன்! – ஜக்கியா ஜஃப்ரி!

நான் ஒருபோதும் மோடியை மன்னிக்கவே மாட்டேன்! – ஜக்கியா ஜஃப்ரி!

குஜராத் கலவரத்தின் போது குல்பர்க் வழக்கில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டி ஜக்கியா ஜஃப்ரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) விசாரிக்கப்படுகிறது. குஜராத் 2002 கலவர வழக்கில், பிரதமர் மோடி உள்ளிட்டவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஜக்கியா ஜஃப்ரி மற்றும் அரசு சாரா அமைப்பு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

இந்த கலவரத்திற்கு பின் ஒரு பெரிய சதி இருப்பதாகவும், அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோதிக்கும் மற்றும் பல மூத்த அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நரேந்திர மோடிக்கும், கலவரத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி மோடியும், குஜராத் மாநில அதிகாரிகளும் குற்றமற்றவர்கள் என உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு 2013ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, மோடி மற்றும் பிறரை, 2017 அக்டோபர் 5ஆம் தேதியன்று குஜராத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஜக்கியா ஜஃப்ரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணை நவம்பர் 26ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

நரோடா பாட்டியா, நரோடா கம் மற்றும் குல்பர்க் சமுதாய வழக்குகள் பெரிய சர்ச்சையின் ஒரு பகுதியாக இருந்ததாக ஜக்கியா குற்றஞ்சாட்டி இருந்தார். அதேப்போல், மோடி மற்றும் பிறர் மீதும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

“இந்த கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட நரேந்திரா மோதி அல்லது வேறு யாரும் மன்னிக்கப்படக் கூடாது. நான் எப்படி அவர்களை மன்னிப்பது? இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது, தற்போது நான் எப்படி மன்னிப்பது?” என்று கேட்கிறார் ஜக்கியா ஜஃப்ரி.

“நான் கஷ்டத்துடன் இருந்த நாட்கள், எனக்கு மீண்டும் கிடைக்குமா? இந்த குற்றத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இது மீண்டும் நடக்காமல் இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

2002ஆம் ஆண்டிலிருந்து நீதிக்காக போராடி வரும் ஜக்கியா ஜஃபரிக்கு தற்போது 80 வயது. அவருக்கு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருந்தாலும் அவர் தனது நம்பிக்கையை கைவிடவில்லை. “தற்போது என்னை பார்க்க யாரும் வருவதில்லை. என்னை மிரட்டவும் எவரும் இல்லை. ஆனால் நாட்டில் இருக்கும் சூழல் அபாயகரமானதாக உள்ளது. ஆனால், எனக்கு பயமில்லை. அப்போது அவர்கள் கொல்ல வேண்டியிருந்தது, இப்போதும் கொல்லலாம். ஆனால், நீதிக்கான பாதையில் இருந்து நான் மாறமாட்டேன்” என்கிறார் ஜக்கியா.

Leave a Reply

Top