You are here
Home > Uncategorized > நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த 555 போலி என்கவுண்டர்கள்!

நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த 555 போலி என்கவுண்டர்கள்!

புதுடெல்லி:கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் 555 போலி என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் சம்பவத்தின் உண்மை நிலை வெளியானதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் நிகழ்த்திய போலி என்கவுண்டர்களின் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் அதிக அளவிலான போலி என்கவுண்டர்கள் நடைபெற்றது உத்தரபிரதேச மாநிலத்திலாகும்.அங்கு 138 போலி என்கவுண்டர்கள் அரங்கேறியுள்ளன.

இதர மாநிலங்களில் நடந்த போலி என்கவுண்டர்கள் குறித்த விபரம்:

மணிப்பூர் – 62, அஸ்ஸாம் – 52, மேற்கு வங்காளம் – 35, ஜார்கண்ட் – 30, சட்டீஷ்கர் – 29, ஒடீஸா – 27, ஜம்மு-கஷ்மீர் – 26, தமிழ்நாடு – 23, மத்தியபிரதேசம் – 20.

555 போலி என்கவுண்டர் வழக்குகளில் 144 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன.போலி என்கவுண்டர்களில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாநிலங்களில் ஐந்து மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களாகும்.

2012-13 ஆண்டுகாலத்தில் மட்டுமே போலி என்கவுண்டர்கள் குறைவாக நடந்துள்ளன.2009-10 கால அளவில் 103 போலி என்கவுண்டர்கள் நடந்துள்ளன.2010-11 ஆம் ஆண்டில் 129 ம், 2011-12 ஆண்டு காலத்தில் 197 போலி என்கவுண்டர்களும் நடந்துள்ளன.போலி என்கவுண்டர் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் தேசிய மனித உரிமை கமிஷனின் தலையீட்டின் காரணமாகவே பதிவுச் செய்யப்பட்டுள்ளன என்று ஏசியன் செண்டர் ஃபார் ஹியூமன்ரைட்ஸின் இயக்குநர் சுஹாஸ் சக்மா தெரிவித்துள்ளார்.

இத்தகைய வழக்குகளை மூடி மறைக்கவே மாநில போலீஸ் முயற்சிக்கிறது.இவற்றில் தலையிட மாநில அரசுகள் மீது மத்திய அரசுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை.ஒரு பத்தாண்டு காலம் வரை போலி என்கவுண்டர்கள் ஜம்மு-கஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அதிகமாக நடந்துள்ளன.இன்று மாவோயிஸ்டுகள் அதிகமுள்ள மாநிலங்களில் அரங்கேறுகிறது.ஊடகங்களின் கண்காணிப்பு இல்லாததும், மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்கள் மீதான போலீசின் பயங்கரவாதமும் காரணமாக மாவோயிஸ்ட்கள் பகுதியில் நடக்கும் போலி என்கவுண்டர்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை.மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடக்கும் மோதல்களில் கொல்லப்படுவது அப்பாவிகளான பழங்குடி மக்கள் என்று சுஹாஸ் சக்மா கூறுகிறார்.

கடந்த நிதியாண்டில் உத்தரகாண்ட், திரிபுரா, மேகாலயா, அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போலி என்கவுண்டர்கள் ரிப்போர்ட் செய்யப்படவில்லை.ஆனால், அஸ்ஸாம் மற்றும் மணிப்பூரில் போலி என்கவுண்டர் வழக்குகள் அதிகரிப்பதாக தகவல்.

Leave a Reply

Top