You are here
Home > Uncategorized > நாங்குநேரியில் போலீஸ் பயங்கரவாதம்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!

நாங்குநேரியில் போலீஸ் பயங்கரவாதம்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!

சென்னை:திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியைச் சார்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறை ஆய்வாளர் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுத் தொடர்பாக எஸ்.டி.பி.ஐ மாநிலச் செயலாளர் செய்யதலி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

எஸ்.டி.பி.ஐ-செய்யதலி: “தேவையற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும், நெஞ்சை குறிப்பார்த்து சுட்டு உயிரைப் பறிப்பதற்கும் காவல்துறைக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. இது பகிரங்கமான மனித உரிமை மீறலாகும். இச்சம்பவம் குறித்து முறையான நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மேலும் உயிரிழந்த வானூமாமலை குடும்பத்திற்கு லட்சம் இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும்.” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வைகோ: “நெல்லை மாவட்டம் மறுகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வானமாமலையை காவல்துறை ஆய்வாளர் விஜயகுமார் சுட்டத்தில் அவர் கொல்லப்பட்டுள்ளார். வானமாமலையின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது.

ஈவு இரக்கமற்று காட்டுமிராண்டித் தனமாக வானமாமலையைச் சுட்டுக் கொன்ற காவல்துறை ஆய்வாளர் விஜயகுமார் மீது கொலை வழக்குப் பதிந்து, உடனடியாக கைது செய்து, சட்டப்படியான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதியின் நீதி விசாரணைக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நிவாரண நிதி வழங்குவதோடு, பெரும் துன்பத்துக்கு ஆளாகிவிட்ட அவரது மனைவி மஞ்சுவுக்கு சத்துணவு துறையிலாவது தமிழக அரசு வேலை வழங்க வேண்டும்.”

ராமதாஸ்: “சுட்டுக் கொல்லப்பட்ட வானமாமலை மீது எந்த வழக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவர் மீது ஏதேனும் குற்றச்சாட்டு இருந்தாலும், அவரை சட்டத்தின் முன் நிறுத்துவதுதான் காவல்துறையின் கடமையாகும். அதற்கு மாறாக சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அப்பாவிகளை காவல்துறையினரே சுட்டுக் கொல்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

பொதுமக்கள் முன்னிலையில் அப்பாவி ஒருவரைத் திட்டமிட்டு மார்பில் சுட்டுக் கொன்ற காவல்துறை ஆய்வாளர் விஜயக்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும். வானமாமலையின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.”

ஜி.ராமகிருஷ்ணன்: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டத் தலைவர்கள் மறுகால்குறிச்சி கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அந்தக் கிராமத்தில் சில மாதங்களாக முன் அனுமதியின்றி செங்கல் சூளைக்காக குளத்து மண் அள்ளப்பட்டு வந்தது. இதில் வானமாமலையும் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு ஆய்வாளர் விஜயகுமார் மாமூல் கேட்டபோது அவர் தர மறுத்துள்ளார். உடனே அவரை விசாரணை என்று அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றிருக்கிறார். இது முழுக்க முழுக்க மனித உரிமையை மீறிய செயலாகும்.

விஜயகுமார் மீது மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி விசாரணைக்கும் அரசு உத்தரவிட வேண்டும். வானமாமலை குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Top