You are here
Home > Uncategorized > மோடிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை அலட்சியம் செய்து அவரை காப்பாற்றியுள்ளனர்: பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா!

மோடிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை அலட்சியம் செய்து அவரை காப்பாற்றியுள்ளனர்: பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா!

புதுடெல்லி: கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷன்  மற்றும் சிறப்பு புழனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) ஆகியன நரேந்திர மோடிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை அலட்சியம் செய்து அவரை காப்பாற்றியுள்ளன என்று பத்திரிக்கையாளாரான மனோஜ் மிட்டா (ஹார்பெர் காலின்ஸ்) தனது மோடி மற்றும் குஜராத் என்ற நூலில் தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவரம் குறித்து விசாரணை செய்ய நீதித்துறையால் அமைக்கப்பட்ட கமிஷன்கள் செய்துள்ள தவறினை அவர் தனது புத்தகத்தில் சுட்டிக்காட்டுவதுடன் பி.ஜே.பி மற்றும் சங்கப் பரிவார அமைப்புகளின் பங்கினை மூடி மறைப்பதிலும் அவர்கள் குறியாக இருந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தினைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதனை விசாரித்த கமிஷன்கள் அந்தக் கலவரத்தில் கிடைத்த ஆதாரங்கள் குஜராத்தின் முதலவர் பதவிக்கு பாதிப்பை விளைக்கும் என்பதால் அவை மறைக்கப்பட்டுள்ளன என்று மிட்டா தனது நூலில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புழனாய்வுக் குழு சுதந்திரமாக செயல்படாமல் குஜராத் காவல்துறையின் அடியை பின்பற்றியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட சில தாக்குதல்களை அவை வழக்குகளாக பதிவு செய்திருந்தாலும் குற்றத்தை நிரூபிக்கும் அளவிற்கு வலுவான ஆதாரங்களை அவை திரட்டவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கலவரத்திற்கு பின்னர் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மோடியை பார்த்து ராஜ தர்மத்தை அவர் பின்பற்றி இருக்க வேண்டும் என்று கூறியதை சிறப்பு புலனாய்வுக் குழு கண்டுகொள்ளவில்லையே ஏன் என்று வினவியுள்ளார். மேலும் மோடிக்கு எதிராக போராடியவர்களின் பேரை கெடுப்பதில் எஸ்.ஐ.டி. மிகுந்த கவனம் செலுத்தியது என்றும் மிட்டா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் உச்சநீதிமன்றம் கடந்த 2011 ஆம் ஆண்டின் முதல் எஸ்.ஐ.டி யை கண்காணிப்பதை நிறுத்தியவுடன் எஸ்.ஐ.டி  பகிரங்கமாக இந்த தவறுகளை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நானாவதி கமிஷன் மோடி கோத்ரா சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் உடலை விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு கொடுத்ததை பற்றி ஏன் விசாரிக்கவில்லை என்று  கேட்டுள்ளார். மேலும் விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு இறந்தவர்களின் உடலை அரசின் ஆணையின் பேரில் தான் அளித்ததாக குஜராத் அதிகாரி தெரிவித்ததை மிட்டா தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
கடந்த 1984ஆம் ஆண்டு நடந்த சீக்கிய கலவரத்தில் தொடர்புடையவர் என்று கூறி காங்கிரஸ் தலைவரை விசாரணைக்கு அழைத்த நானாவதி ஏன் மோடியை விசாரணைக்கு அழைக்கவில்லை என்று கேட்டுள்ளார்.
மேலும் இதுபோன்ற பிரச்னைகளில் அரசியல் தலைவர்கள் காப்பாற்றப்படுவது இந்தியாவில் இது முதல் முறை அல்ல என்று கூறியுள்ள அவர் எஸ்.ஐ.டி.யின் இந்த நிலை மோடியை தண்டனையில் இருந்து விடுவித்ததோடு மட்டுமல்லாமல் அவரை அரசியல் அரங்கில் சிறந்த நிர்வாகி என்று சான்றும் அளித்துள்ளது என்று தனது புத்தகத்தில் மிட்டா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Top