You are here
Home > கட்டுரைகள் > பொது கட்டுரைகள் > தேர்தல் ஜுரத்தில் உளறும் மோடி!

தேர்தல் ஜுரத்தில் உளறும் மோடி!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அறிக்கைப் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், மூன்றாவது அணி என்ற முயற்சி சாத்திப்படுமா என்ற கேள்வியும் நம் முன் எழுந்துள்ளது.

இடது சாரிகள், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், அசாம் கண பரிஷத், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியாக உருவாகியுள்ளன. இது போதிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாரம் யெச்சூரி கூறுகையில், “நாங்கள் பொதுவான தீர்மானத்தின் அடிப்படையில் இணைந்து செயல்படுகிறோம். நாடாளுமுன்றத்தில் சாமான்ய மனிதர்களின் பிரச்னைகளை எழுப்புவோம். மூன்றாவது அணியால் மட்டுமே நாட்டில் மதச்சார்பின்மையை மேம்படுத்த முடியும். காங்கிரஸ் கட்சி மதவாத சக்திகளுடன் இணைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்தக் கூட்டணி தேர்தல் கூட்டணியாக மட்டுமே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனென்றால், ஒவ்வொரு தேர்தலின் போதும், இதே போன்றதொரு நிலை உருவாகுவது என்பது சகஜமானதே. இது, போதிய வெற்றி பெறாததற்கு காரணமும் உண்டு.

தேர்தல் முடிந்த பிறகு சிறு சிறு கருத்துவேறுபாடுகளால் பிளவு பட்டு சென்று விடுவது என்பதுதான் மூன்றாவது அணியின் வரலாறு. இதனால், பி.ஜே.பி., காங்கிரஸ் கட்சிகளுக்கே மாறி மாறி ஓட்டளிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மூன்றாவது அணி தொடர்பாக பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய நரேந்திர மோடி, மூன்றாவது அணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தால் இந்தியா மூன்றாம் தர நாடாகும் என்று “அக்கறையுடன்” கூறியுள்ளார். மோடியின் இந்தக் கூற்று அரசியல் அரங்கில் எந்த விவாதத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

பிரதமர் கனவுடன் வலம் வரும் மோடிக்கு என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை. மற்ற மாநிலங்களின் வளர்ச்சியைப் பற்றி பேசி வரும் இவர் முதலமைச்சராக இருக்கும் குஜராத் மாநிலத்தின் நிலையோ மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. குஜராத்தின் வளர்ச்சியைப் பற்றி தங்களுடைய பேனாக்களை பயன்படுத்தும் பத்திரிகைகள், அங்குள்ள குறைகளைப் பற்றி எழுத முன்வருவதில்லை என்பதுதான் இன்றைய பத்திரிகைகளின் நிலையாகும்.

பாரதிய ஜனதா 1998 முதல் 2004 வரை மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் நாடாளுமன்றத் தாக்குதல், சவப்பெட்டி ஊழல் போன்ற கேவலமான நிகழ்வுகள் நடைபெற்றன. பாரதிய ஜனதாவின் ஊழல் பற்றி செய்திகள் மலிந்து கிடக்கின்றன. தம் நாட்டிற்காக கார்கில் போரில் உயிழிந்தவர்களின் சவப்பெட்டியில் ஊழல் செய்தவர்கள் இவர்கள் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

அதே போன்று, கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களின் ஊழல் முறைகேடுகளால், பாரதிய ஜனதா ஆட்சியை இழந்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. கர்நாடகாவில் மூன்று முதல்வர்கள் ஒரே ஆட்சியில் மாறினார்கள் என்றால் அது பி.ஜே.பி.யில் மட்டும்தான் என்ற கேவலமான பெருமைக்கும் இவர்கள் சொந்தக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள்.

நம் நாட்டை உலக அரங்கில் தலை குனிய வைத்த மூன்று நிகழ்வுகள் மறக்க முடியாதவை. ஒன்று, தேசத் தந்தை மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், வரலாற்றுச் சின்னமான பாபரி மஸ்ஜித் இடிப்பு, 2002ல் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை. இந்த மூன்று ஈன சம்பவங்களும் இன்று நாட்டை ஆளத் துடிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் வகையறாக்களால் வஞ்சகமாக நிகழ்த்தப்பட்டது. இவர்களின் அதிகார பீடமான ஆர்.எஸ்.எஸ்.ஸின் உத்தரவின் பேரிலே இவை அரங்கேற்றப்பட்டன.

ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகளால் நிகழ்த்தப்பட்ட இந்த மூன்று கொடும் ஈனச் சம்பவங்களிலும் இந்தியா உலக அரங்கில் தலை குனிந்து நின்றது.

ஒரு மாநிலத்தில் 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிறைகளில் இருக்கின்றார்கள் என்றால் அது குஜராத்தில் மட்டும்தான் இருக்கும். நரேந்திர மோடியை கொல்ல வந்தார்கள் என்று கூறி, இஷ்ரத் ஜஹான் உட்பட நான்கு போரை போலி என்கௌண்டரில் அநியாயமாக சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் சிறையில் இருக்கும் டி.ஜி.பி. வன்சாரா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “நான் சிறையில் இருக்கிறேன் என்றால், எனக்கு என்கௌண்டர் செய்ய உத்தரவிட்டவரும் சிறையில் இருக்க வேண்டியவர்தான்” என்று கூறினார்.

மோடி வகையறாக்களைத்தான் அவர் குறிப்பிட்டார். இதற்கெல்லாம் மோடியின் தரப்பில் இருந்தும், பாரதியா ஜனதாவின் தரப்பில் இருந்தும் பதில் கிடையாது.

குஜராத் உளவுத்துறையின் இன்றைய முக்கியமான வேலை “இளம் பெண்களை வேவு பார்ப்பது”தான். மோடியின் கட்டளையின் பேரில் அவர்களின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வது, யார் யாருக்கெல்லாம் அந்த இளம் பெண் பேசியிருக்கிறார் என்பது உட்பட தகவல்களை அளிப்பது போன்ற வேலையைத்தான் குஜராத் காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் செய்து வருகின்றனர்.

இதனால், மோடி பிரதமரானால், ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் இளம் பெண்களை வேவு பார்ப்பதுதான் வேலையாக இருக்கும். மோடியின் இந்த வேலையை அனைவரும் அறிவர். மோடி நான் ஒரு வலிமையான தலைவர். வலிமையான நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்று வீரா வசனம் பேசி வருகிறார்.

இன்றைய இந்தியாவிற்கு தேவை ஒரு வலிமையான தலைவரல்ல. இந்தியா வலிமையான நாடாக உருவாக வேண்டும் என்பதல்ல. இந்தியா மற்ற நாடுகளை விட எல்லா விதத்திலும் முன்னேற்றப் பாதையில்தான் சென்று கொண்டிருக்கின்றது. பன்முக மக்கள் வாழும் இந்தியாவில் இனம், மொழி, ஜாதி என்ற வேறுபாடின்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் அனைவரையும் அனுசரித்து அழைத்துச் செல்கிற, அவர்கள் அனைவருக்கும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைச் சரிவர அளிக்கின்ற ஒரு சிறந்த  தலைவர்தான் தற்போதைய இந்தியாவிற்கு தேவை.

அது,  மோடி கிடையாது என்பது மட்டும் அப்பட்டமான உண்மை. கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் மோடியை பிரதமராக்க துடிக்கின்றன. மோடி பிரதமரானால் அவர்கள் கொள்ளை லாபம் அடைவார்கள். அவர்களுக்கு அனைத்து சலுகைகளையும் மோடி அறிவிப்பார். ஆனால், சாமான்ய மக்கள் துன்பத்திற்கு மேல் துன்பம் அனுபவிப்பார்கள்.

சாதாரண, சராசரி இந்தியக் குடிமகனுக்கு அனைத்து உரிமைகளையும் பாரபட்சமின்றி அளிக்கும் ஒரு நல்ல தலைவரே இந்தியவாவின் இப்போதைய தேவை.

நெல்லை சலீம்

Leave a Reply

Top