You are here
Home > Uncategorized > தீர்ப்புகளில் பெண்களை இழிவு படுத்தக்கூடாது: டெல்லி உயர்நீதிமன்றம்!

தீர்ப்புகளில் பெண்களை இழிவு படுத்தக்கூடாது: டெல்லி உயர்நீதிமன்றம்!

புதுடெல்லி: பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள், தங்களுடைய தீர்ப்புகளில் பெண்களை இழிவுபடுத்தி விமர்சிக்கக் கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஒரு வழக்கின் தீர்ப்பில், “19 முதல் 24 வயது வரை உள்ள இளம் பெண்கள் அவர்களுடைய காதலர்களுடன் தன்னிச்சையாக வீட்டை விட்டு ஓடிப் போய்விடுகின்றனர்” என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பெண்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டு, குறிப்பிட்டபடிதான் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவது போன்ற வகையிலும் நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். விசாரணை விரைவு நீதிமன்ற நீதிபதியின் இத்தீர்ப்பை அறிந்த தில்லி உயர்நீதிமன்றம், தானே முன்வந்து விசாரணை நடத்தியது.

விசாரணையின் முடிவில் அந்த நீதிபதியின் கருத்துகளுக்கு, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரதீப் நந்த்ரஜோக், வி.கே. ராவ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் கண்டனம் தெரிவித்தது.”வழக்கில் முன்வைக்கப்படும் சாட்சியங்கள், ஆதாரங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வாசகங்கள் இருக்க வேண்டுமே தவிர, தங்களது சொந்த அல்லது சமூகப் பார்வைகளைத் தீர்ப்புகளில் தெரிவிக்கக் கூடாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தீர்ப்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்த கருத்துகள் பொதுவான தன்மையிலானவை. பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் அலட்சியமான விமர்சனங்களையும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார். முடிவு எடுப்பதில் பெண்களின் நிலை குறித்து தனது சொந்த அபிப்பிராயத்தை நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். அது தவறானது. மாறி வரும் இந்திய சமூகத்தில் முடிவு எடுப்பதில் பெண்கள் குழப்ப நிலையில் உள்ளனர்.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அவருக்குள்ள விருப்பம் மற்றும் ஆணாதிக்கம் மிகுந்த சமூகச் சூழல் ஆகியவற்றுக்கு இடையே பெண்கள் சிக்கிக் கொண்டு வதை படுகின்றனர். அதை கவனத்துடனும் கருணையுடனும்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, சொற்பொழிவு போன்ற அறிவுரைகளைத் தரக் கூடாது.

இந்த வழக்கின் தீர்ப்பில் விசாரணை நீதிமன்ற நீதிபதி, அப்பெண் குறித்து தெரிவித்த கருத்துகள், அப்பெண் எப்படி சமூகத்தில் நடந்து கொள்ள வேண்டும் என பிரசங்கம் செய்வதைப் போல உள்ளது. அது நீதிபதியின் வேலையல்ல. சமூக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு தனி நபருக்கும் உரிமை உள்ளது. சிலர் அவ்வாறு தேர்வு செய்யும்போது விரும்பத்தகாதவை நடந்து விடுகின்றன. அதற்காக நீதிமன்றங்கள், உன் வாழ்க்கையை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இந்த சமூகம் உனக்காக கண்ணீர் வடிக்காது என்று சொல்லக் கூடாது.

அலட்சியமான பார்வையுடன் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள், காவல்நிலையங்களில் பெண்களைத் துன்புறுத்தவே உதவும். மேலும், அலட்சியமான முறையில் விசாரணைகள் நடைபெறுவதுடன், குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான, முழுமையான சாட்சியங்கள் நீதிமன்றத்தின் முன்பு கொண்டுவர முடியாத சூழல் ஏற்படும்.

நீதிமன்றங்களின் இது போன்ற தீர்ப்புகள், பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது காவல் துறையினருக்கு ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்து அதன்படியே விசாரிக்க வழிவகுத்து விடும். மேலும், இது போன்ற தீர்ப்புகளை முன்வைத்து, பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிராக வழக்குரைஞர்கள் வாதிடக்கூடும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Top