You are here
Home > Uncategorized > திரிவேதி வெளியே!

திரிவேதி வெளியே!

புதுடெல்லி:ரெயில்வே கட்டணத்தை உயர்த்தியதன் காரணமாக தீதி என்று அழைக்கப்படும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மமதா பானர்ஜியின் கோபத்திற்கு ஆளான மத்திய ரெயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தனது இறுதியாக ராஜினாமா செய்துள்ளார்.

முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு கடந்த நான்கு தினங்களாக நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் திரிவேதியின் ராஜினாமா மூலம் முடிவுக்கு வந்துள்ளது. மத்திய ஷிப்பிங் இணை அமைச்சரான முகுல்ராய் விரைவில் ரெயில்வே அமைச்சராக பதவி ஏற்பார் என கருதப்படுகிறது.

மமதா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால்தான் ராஜினாமா செய்வேன் என்று சனிக்கிழமை திரிவேதி தெரிவித்திருந்தார். ஆனால், தெளிவான முடிவை அறிவதற்கு அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை மமதாவை தொலைபேசியில் தொடர்புகொண்டார். கட்சியின் தீர்மானத்தின் படி பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று மமதா கூறியுள்ளார். தன்னை அமைச்சராக்கியது திரிணாமுல் காங்கிரஸ் என்பதால் கட்டுப்பாடு மிக்க படைவீரனை போல தான் ராஜினாமா செய்வதாக திரிவேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திரிவேதியின் ராஜினாமா செய்தியை முதலில் வெளியிட்டவரும் மமதா ஆவார். கொல்கத்தாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லி புறப்பட்ட மம்தா பானர்ஜி இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“தினேஷ் திரிவேதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார், கட்சியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ராஜிநாமா கடிதம் அளிப்பதாக அவர் உறுதியளித்தார்” என்று மம்தா கூறினார்.

நேருக்கு நேர் மோதலுக்கு தயாரான திரிவேதியை அமைச்சரவையில் இருந்து வெளியேறச் செய்ய அழுத்தம் கொடுத்து வந்த மமதா அதிரடி நடவடிக்கையாக டெல்லிக்கு புறப்பட்ட வேளையில் திரிவேதி வேறு வழியின்றி தனது ராஜினாமா கடிதத்தை மமதாவிடம் அளித்துள்ளார். பிரதமர் தலையிடவேண்டும் என்று மமதா வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்த பிறகும் திரிவேதி அசைந்துக் கொடுக்கவில்லை. இதனால் இறுதிக்கட்ட நடவடிக்கையாக அவர் டெல்லிக்கு புறப்பட்டு வந்தார். குடியரசு தலைவரின் உரை மீதான விவாதத்தில் மக்களவையில் திங்கள் கிழமை பிரதமர் பதிலளிக்க இருக்கும் சூழலில் மமதாவின் வருகை அமைந்துள்ளது.

ரெயில்வே பட்ஜெட்டில் துறை சார்ந்த அமைச்சரான திரிவேதி பதில் அளிக்கும் முன்பே அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்பதற்காகவே மமதாவின் இந்த நடவடிக்கை அமைந்தது. டெல்லியில் பிரதமர் உள்ளிட்டவர்களை சந்திக்கும் மமதா ரெயில்வே கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்துவார் என கருதப்படுகிறது. ரெயில்வே கட்டண உயர்வால் அதிருப்தி அடைந்திருக்கும் மமதாவை சமாதானப்படுத்த குறைந்த வகுப்புக் கட்டணத்தில் சிறிதளவு மாற்றத்தை அரசு ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

ரெயில்வே பட்ஜெட்டில் வகுப்புக்கட்டணம் உயரவும், திரிவேதியின் ராஜினாமா இழுத்துக்கொண்டே செல்லவும் காரணமானவர் என கருதப்படும் பிரணாப் முகர்ஜியையும் மமதா சந்திப்பார் என கருதப்படுகிறது. திரிவேதி ராஜினாமா செய்துள்ள சூழலில் ரெயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதியமைச்சரான பிரணாப் பதில் அளிப்பார் என கருதப்படுகிறது.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top