You are here
Home > Uncategorized > தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்:வரிகள் இல்லை!

தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்:வரிகள் இல்லை!

சென்னை:தமிழ்நாடு அரசு 2014-15-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைவியாழக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. மாநில நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. எனினும் உபரி வருவாயாக ரூ.289 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் (2014-15) வருவாய் இனங்கள் மூலம் ரூ.1,27,389 கோடி கிடைக்கும்   எனவும், செலவினங்கள் ரூ.1,27,100 கோடியாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வருவாய் உபரி ரூ.289 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மா உணவகம், அம்மா குடிநீர்த் திட்டங்களைத் தொடர்ந்து, மருந்துகளை குறைந்த விலையில் விற்க, புதிதாக 100 அம்மா மருந்தகங்கள் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1,593 கோடியில் பசுமை மின்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு
தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் நிதிநிலைமை கடினமாக இருந்தாலும் மானியம் மற்றும் உதவித்தொகைகளுக்காக ரூ.49,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

2 ஆயிரம் பொது சேவை மையங்கள்: தமிழகத்தில் கூடுதலாக 2 ஆயிரம் பொதுச் சேவை மையங்கள் தனியார்-பொது பங்களிப்பு முறையில் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும். மேலும், சென்னையில் சொத்துவரி, மின் கட்டணம், குடிநீர் உள்பட பல்வேறு வரிகளை ஒரே இடத்தில் செலுத்துவதற்கு 200 பொதுச்சேவை மையங்கள் தொடங்கப்படும். இந்தத் திட்டம் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள்
மற்றும் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

கூவம் நதியை சீரமைத்து மீட்டெடுப்பதற்காக ரூ.3 ஆயிரத்து 833 கோடியில் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும். மாநிலத்துக்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த ரூ.119.98 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்காலத்தில் பராமரிப்புத் தொகையாக ரூ.4 ஆயிரம் அளிக்கப்பட உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வறட்சியைச் சந்தித்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கவும், கால்நடைகளுக்கான தீவனத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் ரூ.681 கோடி அளவிலான நிவாரணத் தொகுப்பு வழங்கப்படும்.

பருத்தி உற்பத்தியில் கவனம் செலுத்தும் வகையில் ரூ.50 கோடி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம் என்ற பெருந்திட்டம் தொடங்கப்படும்.முன் எப்போதும் இல்லாத வகையில், கூட்டுறவு அமைப்புகளுக்கான பயிர்க் கடன் இலக்கு ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும்.

கால்நடை காப்பீட்டுத் திட்டம்: கால்நடைக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் வரும் நிதியாண்டில் விரிவுபடுத்துவதற்கும்  தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாநிலத்தில் ரூ.200 கோடியில் பழைய பஸ்கள் மாற்றப்பட்டு ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும். மேலும், போக்குவரத்துத் துறைக்கு டீசல் மானியமாக ரூ.500 கோடி அளிக்கப்படும். சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்புச்
செயல்படுத்தப்படும்.

சென்னை நகரில் மோனோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நகர்ப்புறங்களில் வீடுகளற்ற ஆதரவற்றோருக்கு 62 புதிய காப்பகங்கள் ஏற்படுத்தப்படும்.

மாநகர பஸ்களின் போக்குவரத்துத் திறனை உயர்த்தும் வகையில், பஸ்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்படும். இளைஞர்களின் திறனை மேம்படுத்த ஒரகடத்தில் அமைக்கப்பட்டுள்ளது போன்று, திருநெல்வேலி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் தனியாக திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும்.மாநிலத்தில் சென்னை உள்பட 11 இடங்களில் புதிதாக 1,747 குடியிருப்புகள் கட்டப்படும்.

மருத்துவத் துறைக்கு ஊக்கம்:

ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஒரு நடமாடும் மருத்துவக் குழு வீதம், 770 மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். தஞ்சாவூர், திருநெல்வேலியில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

இலவசத் திட்டங்களுக்கு நிதி:

வரும் நிதியாண்டில் 12 ஆயிரம் பேருக்கு இலவச கறவை மாடுகள் அளிக்க ரூ.43.65 கோடியும், 1.5 லட்சம் பேருக்கு வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்துக்காக ரூ.198.25 கோடியும் தாலிக்கு தங்கம் மற்றும் உதவித் தொகை வழங்குவதற்காக ரூ.751 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 35 லட்சம் பேருக்கு இலவச மின்விசிறி, கிரைண்டர் மற்றும் மிக்ஸி வழங்குவதற்காக ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் 5.5 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்க ரூ.1,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் 60 ஆயிரம் பேருக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்காக ரூ.1,260 கோடி நிதி ஒதுக்கப்படும். உணவுத் துறையில் இலவச அரிசி, சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்த வரும் நிதியாண்டில் ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தனது உரையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இப்போதுள்ள கடினமான நிதிச் சூழலில் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்யும் வகையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறப்பு அம்சங்கள்:

  • ரூ.1,100 கோடியில் 5.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்.
  • குடிநீர்த் தட்டுப்பாடு, கால்நடை தீவனத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க ரூ.681 கோடி நிவாரணத் தொகுப்பு.
  • தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் பொதுச் சேவை மையங்கள்.
  • கூவம் நதியை சீரமைக்க ரூ.3,833 கோடியில் திட்டம்.
  • ரூ.200 கோடியில் ஆயிரம் புதிய பஸ்கள்.
  • சாலை மேம்பாட்டுக்கு ரூ.2,800 கோடி
  • மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் பராமரிப்பு உதவித் தொகை.
  • தஞ்சை, திருநெல்வேலியில் ரூ.300 கோடியில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1,500 ஆக உயர்வு.
  • இலவச மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர் வழங்க ரூ.2,000 கோடி.
  • 4,827 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு லேப்-டாப்.
  • ரூ.50 கோடியில் தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம்.
  • கூட்டுறவு பயிர்க் கடன் இலக்கு ரூ.5000 கோடி.
  • ஐ.டி. தொழில் முனைவோருக்காக தொழில்நுட்பப் பூங்காக்களில் தனியாக இடம் ஒதுக்கப்படும்

மானியங்களுக்கான நிதி ஒதுக்கீடு:

பொது விநியோகத் திட்ட உணவு மானியமாக ரூ.5,300 கோடி மின் மானியமாக ரூ.5,400 கோடி முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக ரூ.757 கோடி இலவச வேட்டிச் சேலை திட்டத்துக்கு ரூ.499 கோடி.

துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு:

  • பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.17,731 கோடி
  • சுகாதாரத் துறைக்கு ரூ.7,005 கோடி
  • காவல் துறைக்கு ரூ.5,186 கோடி
  • உயர் கல்வித் துறைக்கு ரூ.3,627 கோடி
  • நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.2,800 கோடி

Leave a Reply

Top