You are here
Home > Uncategorized > தனியார் தரகு முதலாளிகளுக்காக ஜெயந்தியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதா?

தனியார் தரகு முதலாளிகளுக்காக ஜெயந்தியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதா?

புதுடெல்லி: மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சராக இருந்த தமிழகத்தின் ஜெயந்தி நடராஜனின் ராஜினாமா சர்ச்சையை கிளப்பியுள்ளது. மக்களவை தேர்தலில் கட்சிப் பணிகளுக்காக ஜெயந்தி நடராஜன் ராஜினாமா செய்தார் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டாலும், தனியார் தரகு நிறுவனங்களின் அழுத்தத்தை தொடர்ந்து ஜெயந்தி ராஜினாமா செய்தார் என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது.

பெரிய திட்டங்களுக்கு ஜெயந்தி நடராஜன் உரிய நேரத்தில் அனுமதி அளிப்பதில்லை என்று பிரதமருக்கும், ராகுலுக்கும் ஏற்கனவே தனியார் தரகு நிறுவனங்கள் புகார் அளித்திருந்தன. இது குறித்து ப. சிதம்பரத்திற்கும், ஜெயந்தி நடராஜனுக்கும் இடையே வெளிப்படையான மோதலே நடந்தது.

பிரதமரும் ஜெயந்தி நடராஜனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். இதனைத் தொடர்ந்து 1000 கோடி ரூபாய்க்கு அதிகமாக செலவாகும் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்க பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் தலைமையில் தனியாக ஒரு போர்டு உருவாக்கப்பட்டது. இது தனது அதிகாரத்தின் மீதான அத்துமீறல் என்று ஜெயந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

ஃபிக்கியின் கூட்டத்திலும் ராகுல் காந்தி, ஜெயந்தியை விமர்சித்ததுடன் தொழிலதிபர்களுக்கு அனைத்து ஆதரவையும் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்தே ஜெயந்தி பதவி விலகினார். சுற்றுச் சூழல் அனுமதி வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று ராகுல் காந்தி கூறுகிறார். நாடு விரைவாக வளர்ச்சி அடைய விரைவாக முடிவு எடுக்க வேண்டும். ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான 300க்கும் அதிகமான திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ராகுல் தெரிவித்தார்.

ரிலையன்ஸ் உள்ளிட்ட தரகு முதலாளிகளுக்கு நெருக்கமானவரான வீரப்ப மொய்லிக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.

கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயு விவகாரத்தில் ரிலையன்சுக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்த ஜெய்ப்பால் ரெட்டியை நீக்கிவிட்டு மொய்லிக்கு பதவியை அளித்தார் பிரதமர்.

Leave a Reply

Top