You are here
Home > Uncategorized > டெல்லியில் நிலவும் இன துவேசம்!- வட கிழக்கு மாநில மாணவர் படுகொலை, மணிப்பூர் மாநில பெண்கள் மீது தாக்குதல்!

டெல்லியில் நிலவும் இன துவேசம்!- வட கிழக்கு மாநில மாணவர் படுகொலை, மணிப்பூர் மாநில பெண்கள் மீது தாக்குதல்!

புதுடெல்லி: தெற்கு டெல்லியின் கோட்லா முபாரக்பூர் பகுதியில் இரண்டு மணிப்பூர் பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீஸ் வழக்கு பதிவுச் செய்ய மறுத்துவிட்டதாக பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த மாதம் 25-ஆம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. 2 தினங்களுக்கு முன்பு நிதோ தானியா என்ற வடகிழக்கு மாநில மாணவர் ஒருவர் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் வெளியானதை தொடர்ந்து இச்சம்பவம் வெளியானது.ஆனால், பெண்கள் அளித்த புகாரில் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும், யாரையும் கைதுச் செய்யவில்லை என்றும் போலீஸ் கூறுகிறது.

மணிப்பூர் பெண் ஒருவர் மீது நாயை கட்டவிழ்த்து விட்டுள்ளார் ஒருவர். இதனைத்தொடர்ந்து அப்பெண்மணி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நாயை விரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து நாயின் உரிமையாளர் அப்பெண்ணை தாக்கியுள்ளார்.இத்தாக்குதலை தடுக்க முயன்ற அப்பெண்ணின் தோழியும் தாக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வேறு சிலரும் அப்பெண்களுக்கு எதிராக இனதுவேசமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு மணிப்பூர் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

பெண்களின் புகாரை பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் கூறுகிறது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இறந்ததை கண்டித்து தலைநகர் டெல்லியில் நூற்றுக்கணக்கான வடகிழக்கு மாணவர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். 20 வயதான நிடோ தானியா, சில தினங்களுக்கு முன்னதாக சில கடைக்காரர்களால், அவரது தோற்றம் குறித்து ஏளனம் செய்யப்பட்டு தாக்கப்பட்டார். பல மணிநேரத்தின் பின்னர் அவர் மரணமடைந்தார்.இது தொடர்பில் இருவர் கைது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த பழங்குடியினச் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாதம் மற்றும் பாரபட்சம் ஆகியவற்றை கோடிட்டுக் காட்டுகின்றது. தானியா மீதான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க தாமதித்ததாக டெல்லி காவல்துறை மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது. ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தலைநகராக இந்தியா இருந்தாலும், அது எல்லா இந்தியர்களுக்குமான பொதுத்தன்மையை இன்னமும் வளர்த்துக்கொள்ளவில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டு காண்பிப்பதாக டெல்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்று ஆய்வுக்கான பேராசியர் எம் எஸ் எஸ் பாண்டியன் பிபிசியிடம் தெரிவித்தார்.

வடகிழக்குப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான கடுமையானதொரு இன வெறுப்பு தில்லியில் பரவலாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Top