You are here
Home > Uncategorized > டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு:நாடு முழுவதும் போராட்டம் தீவிரம்

டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு:நாடு முழுவதும் போராட்டம் தீவிரம்

புதுடெல்லி:டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. முக்கிய எதிர்கட்சிகளான இடதுசாரிகளும், பா.ஜ.கவும் நாடுதழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

டீசலுக்கு 3 ரூபாயும், மண்ணெண்ணெய்க்கு இரண்டு ரூபாயும், சமையல் எரிவாயுக்கு 50 ரூபாயும் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வந்தது. கடந்த மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 அதிகரித்த நிலையில் தற்போது மீண்டும் நாட்டு மக்களின் மீது மிகப்பெரிய சுமையை சுமத்தியுள்ளது மத்திய அரசு. பெட்ரோலுக்கு மீண்டும் ரூ.5 அதிகரிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்திவருகின்றன.

சாதாரண மக்களின் வாழ்க்கை துயரத்தில் ஆழ்த்தும் விலைவாசி உயர்வுக்கு எதிராக முழுஅடைப்பு மற்றும் கண்டன பேரணிகள் நடத்தப்படும் என இடது சாரி கட்சிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. சி.பி.எம், சி.பி.ஐ, ஆர்.எஸ்.பி, பார்வர்டு ப்ளாக் ஆகிய கட்சிகளின் மத்திய தலைமை போராட்டத்தை அறிவித்துள்ளது. மாநில பிரிவுகளுக்கு இதுத்தொடர்பாக உத்தரவிடப்பட்டுள்ளதாக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.கவினர் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்தினர். பா.ஜ.கவின் பாராளுமன்ற பேரணி மோதலில் முடிவுற்றது. ஜந்தமந்தரில் போலீஸ் தடுப்புகளை மீறி நுழைய முயன்ற பா.ஜ.க தொண்டர்கள் மீது போலீஸ் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தியது. வாகனங்களை கட்டி இழுத்து வந்து போராட்டம் நடத்திய எ.ஐ.ஒய்.எஃப் உறுப்பினர்கள் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியின் உருவப்பொம்மையை தீவைத்துக்கொளுத்தினர்.

ஜம்முகஷ்மீரில் டெமோக்ரேடிக் யூத் ஃபெடரேசன் சார்பாக தர்ணா நடைப்பெற்றது. விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெறவேண்டுமென அதன் தலைவர் முஹம்மது இக்பா கனி  வலியுறுத்தினார்.

எரிபொருள், சமையல் எரிவாயு விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு வெளியே இருந்து அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என சமாஜ்வாடி கட்சி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Top