You are here
Home > Uncategorized > சி.பி.ஐயை மேற்பார்வையிட நீதிபதிகள் குழு!

சி.பி.ஐயை மேற்பார்வையிட நீதிபதிகள் குழு!

புதுடெல்லி:சிபிஐ நடத்தும் புலனாய்வுகளை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதிகளின் குழுவை அரசு அமைக்க உள்ளதாகத் தெரிகிறது. ஆட்சியாளர்களின் தலையீட்டில் இருந்து சிபிஐ அமைப்பை மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இது குறித்துப் பரிந்துரை அளிப்பதற்காக அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு நியமித்தது. நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இக்குழுவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, பணியாளர் விவகாரத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவின் கூட்டம் டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவும் பங்கேற்றார். அப்போது, சி.பி.ஐ. அமைப்புக்குத் தன்னாட்சி அதிகாரம் அளிப்பதற்கான பரிந்துரைகள் இறுதிசெய்யப்பட்டன. அவற்றில், சிபிஐ நடத்தும் புலனாய்வுகளை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதிகளின் குழுவை அரசு அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையும் ஒன்றாகும். இந்தக் கூட்டத்துக்குப் பின் சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல், செய்தியாளர்களிடம் கூறியது: உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, சிபிஐ அமைப்புக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கும் சட்டத்தை இயற்றுவது தொடர்பாக பரிந்துரைகளை அளிப்பதற்காக அமைச்சர்கள் குழுவை, பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார். இந்தக் குழு வரும் 27ஆம் தேதி தனது பரிந்துரைகளை மத்திய அமைச்சரவையிடம் அளிக்க இருக்கிறது. அதன் பிறகு, மத்திய அமைச்சரவை இதில் தேவையான மாற்றங்களை மேற்கொண்ட பின், உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 6ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும். சிபிஐ மட்டுல்லாது எந்த அமைப்பு நடத்தும் விசாரணையிலும் குறுக்கீடு இருக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றார் கபில் சிபல்.

Leave a Reply

Top