You are here
Home > Uncategorized > ‘சிறை தண்டனையை அனுபவிக்க முதலில் கீழ் நீதிமன்றத்தில் சரணடையவும்’ – சுக்ராமுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘சிறை தண்டனையை அனுபவிக்க முதலில் கீழ் நீதிமன்றத்தில் சரணடையவும்’ – சுக்ராமுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:தனியார் நிறுவனத்துக்கு ரூ.30 கோடி ஒப்பந்தம் வழங்குவதற்கு ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான சுக்ராம், சிறை தண்டனையை அனுபவிக்க முதலில் டெல்லி கீழ் நீதிமன்றத்தில் சரணடையுமாறு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 1996-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக சுக்ராம்(86) பணியாற்றினார். அப்போது, தொலைத் தொடர்புத் துறைக்கு 3.5 லட்சம் கன்டக்டர் கி.மீ. கேபிள் விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்க, 1996-ல் ஹரியாணா டெலிகாம் நிறுவனத்திடம் ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாக அவர் மீது புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக 1998-ல் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. 13 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் சுக்ராம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்புக் கூறப்பட்டது.

மேலும் தொலைத்தொடர்பு துறை முன்னாள் துணை இயக்குனர் ருனு கோஷ், ஏஆர்எம் நிர்வாக இயக்குனர் ராம ராவுக்கு முறையே 2 மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, ஜாமீன் வழங்கப்பட்டது.

இவர்களது மனுவை கடந்த மாதம் 21-ம் தேதி தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. சிறை தண்டனையை அனுபவிப்பதற்காக டெல்லி கீழ் நீதிமன்றத்தில் நேற்று மாலை சரண் அடையும்படி கூறியிருந்தது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் சுக்ராம் நேற்று முன்தினம் மனுசெய்தார்.

இதன் மீதான விசாரணை நீதிபதிகள் சதாசிவம், சலமேஸ்வர் முன்னிலையில் நேற்று நடந்தது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், “சிறை தண்டனையை அனுபவிக்க முதலில் டெல்லி கீழ்நீதிமன்றத்தில் சரணடையுங்கள். அதன்பின் உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கிறோம்” என்றனர்.

இதனைத் தொடர்ந்து ருனு கோஷ், ராமா ராவ் ஆகியோர் நேற்று சரணடைந்து ஜெயிலுக்கு சென்றனர். மருத்துவ காரணங்களை கூறி சுக்ராம் ஆஜராகவில்லை. இவர் மனு மீது இன்று விசாரணை நடக்கிறது.

7 முறை எம்.எல்.ஏ.வாகவும், 3 முறை எம்.பி.யாகவும் இருந்த சுக்ராம், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின், 1997-ல் இமாச்சல் விகாஸ் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். 1998-ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பிரேம்குமார் துமல் தலைமையிலான மாநில அரசில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தொலைத் தொடர்பு முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

Leave a Reply

Top