You are here
Home > Uncategorized > இந்தியா > சபரிமலை போராட்டம் நடைபெறும் பத்தனம்திட்டாவில் சிபிஎம், பாஜகவை நிராகரித்த மக்கள்! – எஸ்.டி.பி.ஐ. வெற்றி!

சபரிமலை போராட்டம் நடைபெறும் பத்தனம்திட்டாவில் சிபிஎம், பாஜகவை நிராகரித்த மக்கள்! – எஸ்.டி.பி.ஐ. வெற்றி!

கேரளாவில் 14 மாவட்டங்களில் 39 வார்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கூட்டணி 19 வார்டுகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களைக் கைப்பற்றியது. எஸ்.டி.பி.ஐ மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தலா இரு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆலப்புழா புன்னபரா தெற்கு பஞ்சாயத்து 10வது வார்டு தேர்தலில், SDPI கட்சியின் வேட்பாளர் 440 வாக்குகளை பெற்றார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் (காங்கிரஸ்+முஸ்லிம் லீக்) 308 வாக்குகளையும், இடது முன்னணியின் சிபிஎம் வேட்பாளர் 184 வாக்குகளையும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளர் 10 வாக்குகளையும் பெற்றனர். இந்த வார்டை SDPI கட்சி மீண்டும் தக்கவைத்துள்ளது.

அதேபோல் சபரிமலை பிரச்சனையை முன்னிறுத்தி போராட்டக்களமாகவுள்ள பந்தளம் நகராட்சி 10வது வார்டில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை பின்னுக்கு தள்ளிய SDPI கட்சியின் வேட்பாளர் ஹசீனா வெற்றி பெற்றுள்ளார். இங்கு பாஜக 12 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. சிபிஎம் வசம் இருந்த இந்த வார்டில் SDPI வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை விவகாரத்தை முன் வைத்து அந்தக் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன. ஆனால், பத்தனம் திட்டா மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பாரதிய ஜனதாவுக்குப் பலத்த அடியே கிடைத்துள்ளது. இந்த மாவட்டத்தில் இரு வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. அதில், எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஒருவரும் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி ஆலப்புழா மாவட்டத்தில் மட்டுமே இரு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

அதேவேளையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறுகையில், “சபரிமலை போராட்டம் காரணமாகப் பாரதிய ஜனதா கட்சிக்கு இடுக்கி, பத்தனம் திட்டா, ஆலப்புலா மாவட்டங்களில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ளார். சபரிமலைக்குப் பெண்கள் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு கேரளாவில் நடந்த முதல் தேர்தல் இது.

Leave a Reply

Top