You are here
Home > Uncategorized > கோன் பனேகா க்ரோர்பதியில் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்ற ஃபிரோஸ் ஃபாத்திமா!

கோன் பனேகா க்ரோர்பதியில் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்ற ஃபிரோஸ் ஃபாத்திமா!

புதுடெல்லி: சோனி தொலைக்காட்சியில் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா க்ரோர்பதி என்ற நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் உத்தர பிரதேசத்தைச் சார்ந்த ஃபிரோஸ் ஃபாத்திமாவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

நிகழ்ச்சியின் ஃபைனல் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகும். ஸஹாரான்பூருக்கு அருகே ஸன்சார்பூரில் ஒரு ஏழையான குடும்பத்தைச் சார்ந்த 22 வயதான ஃபாத்திமா ஏழாவது சீசனில் ஒரு கோடி ரூபாய் பெறும் முதல் பெண்மணியாவார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தந்தை மரணமடைந்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் படிப்பை பாதியில் கைவிட்டார். இளைய சகோதரியின் கல்லூரி படிப்புக்கான செலவை குடும்பம் தாங்க முடியாததால், தனது படிப்பை தியாகம் செய்தார்.

தந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக வாங்கிய கடன் ரூ. 12 லட்சத்தை பரிசுத் தொகையில் இருந்து கட்டி விடலாம் என்ற ஆறுதல் ஃபிரோஸ் ஃபாத்திமாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஃபாத்திமாவும், அவரது சகோதரியும், தாயாரும் அடங்கியதே அவரது குடும்பம்.

தங்களுக்கு எவ்வித மதிப்பும் அளிக்காத சொந்த கிராமவாசிகள் தற்போது கையில் பணம் வந்தபோது வெகுவாக மாறிவிட்டார்கள் என்று ஃபாத்திமா ஆச்சரியப்படுகின்றார். முன்னர் தங்களின் நிலத்தை ஆக்கிரமிக்கவும், தொந்தரவும் அளித்த முயற்சித்தவர்கள் தற்போது மதிப்பாக பார்ப்பதாகவும், மேடம் என்று அழைப்பதாகவும் ஃபாத்திமா தெரிவித்தார்.

பரிசுத் தொகையில் நவீன உபகரணங்களை வாங்கி விவசாயத்தை மேம்படுத்தப் போவதாக ஃபாத்திமா கூறினார்.

Leave a Reply

Top