You are here
Home > Uncategorized > கூடங்குளம்:ஜெயா அரசு மக்களுக்கு இழைத்த துரோகம் – ராமதாஸ் கடும் கண்டனம்!

கூடங்குளம்:ஜெயா அரசு மக்களுக்கு இழைத்த துரோகம் – ராமதாஸ் கடும் கண்டனம்!

சென்னை:கூடங்குளம் விவகாரத்தில் அப்பகுதி மக்களுக்கு தமிழக அரசு துரோகம் செய்துவிட்டதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் அப்பகுதியில் வாழும் மக்களின் உயிருக்கோ அல்லது வாழ்வாதாரத்திற்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கூறி, அணுமின் நிலையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

கூடங்குளம் மக்களுக்கு கடைசி வரை துணை நிற்பேன் என்று உறுதியளித்த ஜெயலலிதா, இப்போது மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்திருக்கிறார்.

அணுமின் நிலையத்தை திறக்கக் கூடாது என்றுகூறி வந்த ஜெயலலிதா, தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் எம்.ஆர். சீனிவாசனை சேர்த்தபோதே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாடகம் ஆடுகின்றனவோ என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நாடகம் இப்போது வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

மத்திய அரசுடன் பேசி அணுமின் நிலையத்தை திறக்க எப்போதோ முடிவு செய்துவிட்ட ஜெயலலிதா, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக தேர்தல் முடிந்த மறுநாளே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காவல்துறையின் மூலம் மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இது ஒருபோதும் வெற்றி பெறாது. கூடங்குளத்தை நந்திகிராம் மற்றும் சிங்கூராக மாற்றி விடக்கூடாது. கூடங்குளம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அணுமின் நிலையத்தை திறக்கும் முடிவை கைவிட வேண்டும்.

அங்கு குவிக்கப்பட்டுள்ள போலீசாரை திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top