You are here
Home > Uncategorized > குஜராத் இனப்படுகொலை:சஞ்சீவ் பட்டிடம் வாக்குமூலம் பதிவு செய்வது ஒத்திவைப்பு

குஜராத் இனப்படுகொலை:சஞ்சீவ் பட்டிடம் வாக்குமூலம் பதிவு செய்வது ஒத்திவைப்பு

அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்கு தொடர்பாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய் பட்டிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்வதை குறித்து கேள்வி எழுப்பி இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் வாக்கு மூலத்தை பதிவு செய்வதை நானாவதி கமிஷன் ஒத்திவைத்துள்ளது. ஜூன் மாதம் 8-ஆம் தேதி இம்மனுக்கள் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்படும்.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்கில் சஞ்சீவ் பட் சாட்சி அல்ல. அவரிடமிருந்து தகவல்களை சேகரிக்கவே வாக்கு மூலம் பெறப்படுகிறது. ஆகவே அவரிடம் குறுக்கு விசாரணை செய்ய பிறரை அனுமதிப்பது சட்டத்தை மீறிய செயலாகும் என சுட்டிக்காடி ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் மனு தாக்கல் செய்திருந்தது. மேலும் பட் கமிஷன் முன்பு பிரமாணப்பத்திரம் சமர்ப்பிக்கவில்லை. ஆகையால் அவரை குறுக்கு விசாரணை செய்ய இயலாது என ஜம்மியத்தின் மனுவில் கூறப்பட்டிருந்தது.

சஞ்சீவ் பட் தாக்கல் செய்த மனுவில் இதே காரியங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. வழக்கில் தான் ஒரு சாட்சி கிடையாது. கமிஷனின் முன்னிலையில் பிரமாணப்பத்திரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தின் அடிப்படையில் பிறருக்கு குறுக்கு விசாரணை செய்ய அனுமதியளிப்பது தவறு என பட் தெரிவித்திருந்தார். மாநில அரசு சஞ்சீவ் பட்டிடம் குறுக்கு விசாரணை நடத்தும் வேளையில் தான் இம்மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுவரை நடந்த குறுக்கு விசாரணைகளை ரத்து செய்ய ஜம்மியத்துல் உலமாயே ஹிந்து தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது. இரண்டு மனுக்களையும் பரிசீலித்த நானாவதி கமிஷன் வருகிற ஜூன் 8-ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் வரை எல்லா நடவடிக்கைகளையும் ஒத்தி வைத்தது.

Leave a Reply

Top