You are here
Home > Uncategorized > காலிஸ்தான்:ஜெயில் சிங்கிற்கும், சஞ்சய் காந்திக்கும் தொடர்பு-காங்கிரஸ் கட்சியின் புதிய புத்தகம்

காலிஸ்தான்:ஜெயில் சிங்கிற்கும், சஞ்சய் காந்திக்கும் தொடர்பு-காங்கிரஸ் கட்சியின் புதிய புத்தகம்

புதுடெல்லி:எண்பதுகளில் பஞ்சாப் பிரச்சனைக்கு அம்மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்த கியானி ஜெயில்சிங்கும், இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தியும் காரணம் என காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை விவரிக்கும் புதிய புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

மதத்தின் பெயரால் நடத்திய அசுத்தமான அரசியல் விளையாட்டு தான் காலிஸ்தான் கொந்தளிப்பிற்கும், தீவிரவாதத்திற்கும் பின்னணியாக அமைந்தன என ’ஒரு நூற்றாண்டில் காங்கிரஸின் வரலாறு’ என்ற நூலின் ஐந்தாவது பாகத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான எழுத்தாளர்கள் குழுவினர் புத்தகத்தை தொகுத்துள்ளனர். மதத்தின் பெயரால் நடத்தப்பட்ட அரசியல் விளையாட்டு காங்கிரஸ் கட்சிக்கும், அகாலி தளத்திற்கும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

1972-ஆம் ஆண்டு ஜெயில் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அகாலிதள தொண்டர்களை பலவீனப் படுத்தினாலும் இது பஞ்சாபில் உள்ளூர் அரசியலை வகுப்புவாதமயமாக மாற்றிவிட்டது என அந்நூல் கூறுகிறது. அகாலி தள தலைமைக்கு எதிராக ஜெயில்சிங்கும், சஞ்சய் காந்தியும் பிந்தரன்வாலேயே வளர்த்தி விட்ட போதிலும் அது விபரீதமான பின் விளைவுகளை ஏற்படுத்தியதாக புத்தகம் கூறுகிறது.

ஆனால் புத்தகத்தின் உள்ளடக்கத்தை காங்கிரஸ் அங்கீகரிக்க வேண்டிய சூழல் இல்லை என கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி தெரிவித்தார். புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் சம்பவங்கள் குறித்து ஆதாரத்துடனும், அறிவு ரீதியான பார்வையின் அடிப்படையில் எடுத்தியம்ப காங்கிரஸ் விரும்புவதாக புத்தகத்தின் முன்னுரையில் பிரணாப் முகர்ஜி எழுதியுள்ளார்.

Leave a Reply

Top