You are here
Home > கட்டுரைகள் > காந்தி முதல் கர்க்கரே வரை!

காந்தி முதல் கர்க்கரே வரை!

ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாய் வாழ்வதைக் கண்டு பொறுக்காத தேச விரோத சக்திகள் பிரிவினையை உண்டாக்கி அதன் மூலம் நாட்டின் நல்லிணக்கத்திற்கு பெரும் சவாலாக திகழ்கின்றனர். அதிகாரத்தின் படிக்கல் அரசியல் என்பதனை விளங்கிய ஆதிக்க வர்க்கத்தினர் இன்று அதற்கு துணையாய் ஆசை வார்த்தை ஜாலங்களுடன் பாமர மக்களின் மனங்களை மாற்றும் சூழ்ச்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

பாஜக ஆட்சியில் இருந்த காலத்திலும், ஆட்சியில் இல்லாத போதும் ஒரு சாதாரண வலது சாரி அதிகார வெறி பிடித்த கட்சிதான் என்பதை நிரூபித்தது. அவர்கள் பெரு ஊழல் முதல் இனக்கலவரங்கள் வரை நடத்தி இந்தியாவை ரத்தக் களறியாக மாற்றினார்கள். மதத்தின் பெயரால் இந்தியாவின் அமைதியை சீர்குலைத்தவர்களுக்கு தேச விடுதலைக்காய் பாடுபட்ட காந்தியைப் படுகொலை செய்ததிலிருந்து நம் அனைவராலும் மாவீரன் என்று போற்றப்பட்ட ஹேமந்த் கர்க்கரேயை சதித் திட்டம் தீட்டி தீர்த்துக் கட்டியது வரை பங்குண்டு என்று ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

1948 ஜனவரி 13 அன்று திட்டமிடப்படு எப்படி 17 நாட்களில் காந்தியைக் கொன்றார்கள்? யார் இந்தக் கொலையைச் செய்தது? கொன்று விட்டு முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டது யார்? இந்தக் கொலைகாரர்களின் அரசியல் என்ன?

என்றைக்கு இந்து மகா சபையும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவாரக் கும்பலும், அவற்றின் அரசியல் வடிவமான முன்னர் ஜனசங்கமும், பின்னர் பாரதீய ஜனதாவும் தோற்றமெடுத்தனவோ, அந்த நொடி முதலே அதன் குருதி ஓட்டத்தில் மதக் கலவர எண்ணங்கள் கருத்தரித்து விட்டன. காவி பயங்கரவாதம் அவ்வப்போது வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் கலவரத்துக்குக் கத்தி தீட்டித்தான் வந்திருக்கின்றது.

அரசால் நியமனம் செய்யப்பட்ட ஆணையங்களும் ஆதாரப்பூர்வமாகவே இந்த ஃபாசிசக் கூட்டத்தின் வன்முறைக் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தியும் உள்ளன. இதற்காகவே இந்த அமைப்பின் முக்கிய கூர்மையான அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பலமுறை தடையும் செய்யப்பட்டது.

இந்தியா முழுவதும் நடைபெற்று வந்திருக்கிற பல்வேறு கலவரங்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கும், சங் பரிவாரக் கூட்டத்தின் தலைமை அமைப்புகளுக்கும் சங்கிலித் தொடர் போன்ற இணைப்புகள் இருந்திருக்கின்றன என்ற தகவல் ஆதாரப்பூர்வமாகக் கிடைத்துவிட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த காவி பயங்கரவாத சம்பவங்களில் ஆரம்பத்தில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்து துன்புறுத்தப்பட்டு பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு அவை இந்து அமைப்புகளின் பயங்கரவாதம் என்று நிரூபணமாகியிருக்கின்றன.

அஜ்மீர் தர்காவில் அக்டோபர் 11, 2007ல்  குண்டு வெடித்து 3 பேர் கொல்லப்பட்டனர். இது ஹூஜி, எல்-இ-டி அமைப்புகளைச் சேர்ந்த ஜிகாதி பயங்கரவாதிகளின் கைவண்ணம் என்ற புலனாய்வு அதிகாரிகளின் கதையைப் பத்திரிகைகளும் ஆர்வத்துடன் பரப்பி வந்தன. கைது செய்யப்பட்டவர்களில் அப்துல் ஹபீஸ் ஷமீம், குஷிபுர் ரஹ்மான், இம்ரான் அலீ ஆகியோர் அடங்குவர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் போலீஸ் தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் பட்டிதார் என்ற மூன்று பேரைக் கைது செய்தது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான குப்தாதான் அந்தக் குண்டை வெடிக்கச் செய்த மொபைல் தொலைபேசியையும் சிம் கார்டையும் வாங்கினார் என்று தெரிய வந்தது.

குண்டுவெடிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட சுனில் ஜோஷி திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் என்று அறிவிக்கப்பட்டது.

மே 18, 2007ல் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்; 50 பேர் காயமடைந்தனர். ’உள்ளூர் உதவியுடன் ஹர்கத்-உல்-ஜிகாத்-எ-இஸ்லாமி (HuJI) என்ற அமைப்புதான் இதைச் செய்திருக்க வேண்டும்’ என்று ஹைதராபாத் போலீஸ் சொன்னது. 80 முஸ்லிம்கள் அடைத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு, 25 பேர் குற்றம் செய்ததாக ஒத்துக் கொள்ள வைக்கப்பட்டனர்.

ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ‘அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான மொபைல் போன் – சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன’ என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது. ‘பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் – டி.என்.டி. வெடிமருந்து கலவை இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் விகிதத்திலானது’ என்றும் தெரிய வந்தது.

இப்ராஹீம் ஜுனைத், ஷுஐப் ஜாகிர்தார், இம்ரான் கான், முஹம்மது அப்துல் கலீம் உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திரா கல்சங்காரா பற்றிய தகவல் சொல்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஜூன் 2010ல் போலீஸ் அறிவித்தது. லோகேஷ் ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டார்.

அக்டோபர் 2009ல் மார்கோவாவில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 2010ல் தேசிய புலனாய்வு நிறுவனம் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் சார்ந்த 11 பேர் மீது கோவாவில் உள்ள பஞ்சிம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

செப்டம்பர் 8, 2006 அன்று மகராஷ்டிராவின் மாலேகானில் ஒரு மஸ்ஜிதுக்கு அருகில் மூன்று குண்டுகள் வெடித்து 37 பேர் கொல்லப்பட்டனர்; 100 பேர் காயமடைந்தனர். சிமி அமைப்பைச் சேர்ந்த சல்மான் ஃபார்சி, ஃபரூக் இக்பால் மக்தூமி, ரயீஸ் அகமது, நூருல் ஹூதா ஷம்சு தோஹா, ஷபீர் பேட்டரிவாலா ஆகியோர் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.

ஆனால், முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முஹம்மது ஜாகித் அந்த நாளன்று மாலேகானிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தார். ஷபீர் மசியுல்லா குண்டுவெடிப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பே போலீஸ் காவலில் இருந்தார். நேரடி சாட்சியங்கள் கொடுத்த தகவல்களின் படி குண்டு வைத்தவர்கள் தாடி இல்லாதவர்கள். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக தாடி வைத்திருப்பவர்கள்.

2008ம் ஆண்டு 7 பேர் உயிரிழந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சந்தேகம் காவி பயங்கரவாதிகள் பக்கம் திரும்பியது. இந்தச் சம்பவத்துக்கும் ஆரம்பத்தில் இந்தியன் முஜாஹிதீன் போன்ற குழுக்கள் சந்தேகிக்கப்பட்டன. பின்னர் அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரீய ஜாக்ரன் மஞ்ச் ஆகிய ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோகித் மற்றும் ஸ்வாமி அமிர்தானந்த் தேவ் தீர்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் மோட்டார் சைக்கிள் குண்டை வெடிக்கச் செய்ய பயன்படுத்தப்பட்டது. விசாரணையின் போது, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்கும் அவர்தான் வெடிமருந்து கொடுத்தாக புரோகித் சொன்னார். ஆனால் ஹைதராபாத் போலீஸ் ஹூஜி உறுப்பினர்களைக் கைது செய்து வைத்திருந்ததால் இந்த விவரத்தை வெளியிட வேண்டாம் என்று சிறப்பு புலனாய்வுப் பிரிவு கேட்டுக் கொள்ளப்பட்டது.

பிப்ரவரி 18, 2007ல் சம்ஜௌதா எக்ஸ்பிரசில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பெரும்பான்மை பாகிஸ்தானியர் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர். ஆரம்பத்தில் எல்-இ-டியும் ஜே-இ-எம்மும் குற்றம் சாட்டப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மத் அலீயும் உண்டு. ஆனால், தடயங்கள் வலதுசாரி இந்துத்துவ பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களைச் சுட்டிக்காட்டின.

மூன்று மாதங்களுக்குப் பிறகு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே முறை இங்கும் பயன்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளான சந்தீப் டாங்கேவையும் ராம்ஜியையும் போலீஸ் தேட ஆரம்பித்தது.

ஜூன் 4, 2008 அன்று, தானே சினிமா குண்டுவெடிப்பு தொடர்பாக ஹிந்து ஜன்ஜாக்ரிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த ரமேஷ் ஹனுமந்த் கட்கரியும் மங்கேஷ் தினகர் நிகமும் கைது செய்யப்பட்டனர். ‘ஜோதா அக்பர்’ திரைப்படத்தைத் திரையிடுவதற்கு எதிர்ப்பாக அந்தக் குண்டுவெடிப்பு திட்டமிடப்பட்டிருந்தது.

ஏப்ரல் 2006ல் நந்தித்தில் உள்ள குண்டு உற்பத்தி பட்டறையில் பஜ்ரங் தள் பயங்கரவாதிகள் என். ராஜ்கோண்ட்வாரும் எச். பன்சேவும் தவறுதலாக வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 2006ல் அதே அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ராவும் பூபிந்தர் சிங்கும் கான்பூரில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டனர்.

இவற்றைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் உள்ள பல நகரங்களில் மஸ்ஜிதுகளில் குண்டுகள் வெடித்தன.  நந்தித்தில் தயாரிக்கப்பட்ட குண்டு அவுரங்காபாத் மஸ்ஜிதுக்கானது என்று தெரிய வந்தது. சம்பவ இடத்தில் அவுரங்காபாத் வரைபடமும் பொய் தாடிகளும் முஸ்லிம் ஆண் உடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

2002-03ல் போபால் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிக்கும் கருவி உள்ளூர் இந்துத்துவா பயங்கரவாதிகளான ராம்நாரயன் கல்சங்கரா, சுனில் ஜோஷி ஆகியோருடன் தொடர்புடையவை என்று தெரிய வந்தன.

கடந்த 24-01-2008 அன்று தமிழகத்தில் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பைப் வெடிகுண்டு வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. இந்து முண்ணனித் தலைவர் ராமகோபாலன் சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்பும் சம்பவம் நடந்த பின்னரும் தென்காசிக்கு வந்து முஸ்லிம்கள் குறித்து அவதூறுகளை அள்ளி வீசினார்.

இந்நிலையில் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்ததாக முன்னாள் இந்து முண்ணனித் தலைவர் குமார பாண்டியனின் சகோதரர் ரவி உட்பட 3 ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

காவி பயங்கரவாதத்தின் கோர முகத்தைத் தொடர்ந்து அம்பலப்படுத்தியதன் விளைவுதான் இன்று பாட்னா சம்பவத்தை நாங்கள் செய்யவில்லை என வலிய வந்து பாஜக ஆட்கள் மறுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பல குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய காவிக் கும்பலை சந்தேகப் பட்டியலில் வைக்கவே நாம் இத்துணை தூரம் உழைக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கைக்கு வேட்டு வைக்கும் இவர்களை மக்கள் இனம் கண்டு புறம் தள்ளவேண்டும்.

வலசை ஃபைஸல்

Leave a Reply

Top