You are here
Home > கட்டுரைகள் > கம்யூனிஸ்டுகளின் கவலை!

கம்யூனிஸ்டுகளின் கவலை!

இருபதாவது அகில இந்திய கட்சி மாநாட்டின் முன்னோடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அரசியல் வரைவு தீர்மானத்தின் சில பகுதிகள் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது.

கடந்த ஆண்டு அரபுலகில் வீசிய வெகுஜன போராட்ட சூறாவளியில் அதாவது அரபு வசந்தத்தில் அபாயம் இருப்பதாக கம்யூனிஸ்டுகளின் உள்ளுணர்வு கூறியதை அப்படியே வரைவு தீர்மானத்தில் ஒரு பகுதியாக இணைத்துள்ளனர். ஒரு புறம் ஏகாதிபத்தியமும், மறுபுறம் மத தீவிரவாதமும் அரபு வசந்தத்தின் மூலம் வலுப்பெற்றுவிட்டதாக கம்யூனிஸ்டுகள் கவலை கொள்கிறார்கள்.

ஏகாதிபத்திய நாடுகளும், முஸ்லிம் அடிப்படைவாதிகளும் இடதுசாரிகளை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பது கம்யூனிஸ்டுகளின் ஆய்வு கண்ணோட்டமாகும். ஆட்சி மாற்றத்திற்காக ஏகாதிபத்தியம் வெற்றிப்பெற்ற நாடுகளில் எல்லாம் தீவிர வலது-மத தீவிரவாத சக்திகள் வளர்ந்துவிட்டதாக கம்யூனிஸ்டுகளின் வரைவு தீர்மானம் புலம்புகிறது.

காலனி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்து அரபு நாடுகள் சுதந்திரம் பெற்ற பிந்தைய காலக்கட்டத்தில் அரபு வசந்தம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் தான்  என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதன் பின்னணியும், விளைவுகளும் குறித்து உண்மையின் அடிப்படையில் ஆய்வு செய்வதிலும், நடுநிலையாக மதிப்பீடு செய்வதிலும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியை தழுவியுள்ளது என்பதை கூறாமல் இருக்கவியலாது.

அரபு நாடுகள் சுதந்திரத்தை பெற்ற பிறகு இவ்வளவு காலமும் அந்நாடுகளை அடக்கி ஆண்ட ஆட்சியாளர்கள், ஏகாதிபத்தியத்தின் கைப்பாவைகளாக மாறி, தங்களின் சர்வாதிகார ஆட்சிக்கு மதசார்பற்ற, ஜனநாயக சாயங்களை பூசியவர்கள் என்ற உண்மையை முதலாவதாக கம்யூனிஸ்டுகள் மறந்துவிட்டார்கள்.

ஈராக், சிரியா, லிபியா, யெமன் போன்ற நாடுகளில் சர்வாதிகார ஆட்சியாளர்கள் சில வேளைகளில் கம்யூனிஸ்டுகளின் சோசியலிச கொள்கையையும் முகமூடியாக அணிந்திருந்தனர். ஆனால், திரைமறைவில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு கூட்டணியின் ஆட்டம் நடந்தது. அல்ஜீரியாவில் முதன் முதலாக சுதந்திரமாக நடத்தப்பட்ட ஜனநாயகரீதியிலான தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவை பெற்று தங்களின் வெற்றியை இஸ்லாமிக் ஸால்வேஷன் ஃப்ரண்ட் உறுதி செய்த வேளையில், ராணுவத்தின் மூலம் தேர்தலை ரத்துச்செய்து, ஆட்சியை அநீதியாக கைப்பற்றி, பத்தாண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போருக்கு வழி வகைச்செய்தது முன்னாள் காலனித்துவ எஜமான் பிரான்சு என்பதை மறந்துவிடக் கூடாது.

துனீசியாவில் ஏகாதிபத்தியவாதியான ஜைனுல் ஆபிதீன் பின் அலிக்கு பின்புலமாக பிரான்சு விளங்கியது. எகிப்தில் ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களது பூரண ஆதரவை தெரிவித்தன என்பது சாமான்யர்களுக்கும் தெரிந்த சேதி. முப்பது, நாற்பது ஆண்டுகளாக இந்த நாடுகளில் நீடித்த ஜனநாயக விரோத, மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சிறுவிரலை கூட அசைப்பதற்கு அந்த நாடுகளில் வாழும் கம்யூனிஸ்டுகளோ, கம்யூனிஸ்ட் இயக்கங்களோ முன்வரவில்லை. அதுமட்டுமல்ல, பெயரளவிலான கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கெல்லாம் பெரும்பாலும் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேற்கொண்டனர்.

தங்களை ஆட்சியிலிருந்து வெளியேற்றினால் மத அடிப்படைவாதிகள் ஆட்சியை பிடித்துவிடுவார்கள் என்ற ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் மந்திர சொல்லுக்கு கம்யூனிஸ்டுகள் கட்டுப்பட்டார்கள் என்பதுதான் முக்கிய காரணம்.

100 சதவீதமும் இஸ்ரேலின் பக்கம் சாய்ந்த அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கையால் கோபம் கொண்ட சில அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் சோவியத் யூனியனில் அபயம் தேடிய பொழுது அவர்கள் இடதுசாரிகளின் பக்கம் என்பதை கம்யூனிஸ்டுகள் தவறாக விளங்கிக் கொண்டார்கள். ஆனால், ஒரு போதும் உள்நாட்டு அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வளர்வதற்கு இந்த சோவியத் ஆதரவு அரபு ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை என்பதுதான் உண்மை. சிரியா மற்றும் ஈராக்கின் ஆட்சியாளர்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும். சிரியாவில் ஹாபிழுல் ஆஸாதிற்கோ, ஈராக்கில் சதாம் ஹுஸைனுக்கோ ஜனநாயகம் மற்றும் சோசியலிச கொள்கையுடன் ஒட்டோ, உறவோ இருந்ததில்லை. ஆனால், வெளியுலகில் இடது சாரிகள் அவர்களை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக கண்டனர். தற்போதைய சிரியாவின் ஆட்சியாளர் பஸ்ஸாருல் ஆஸாத், சொந்த நாட்டு குடிமக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அநியாயமாக கொலை செய்து தொடர்ந்து அட்டூழியங்களை நிகழ்த்தி வரும் சூழலில் அவரை பதவி விலக கோரும் அரபு லீக்கின் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு வந்த வேளையில் அதனை தோற்கடிக்க வீட்டோவை ரஷ்யாவும், சீனாவும் பயன்படுத்தியதும் இந்த இடதுசாரி மனோபாவமாகும். ஓய்வில்லாமல் நடக்கும் இந்த கூட்டுப் படுகொலையால் துயரத்தை அனுபவிக்கும் அரபு மக்கள் மற்றும் சர்வதேச அளவில் மனித நேயத்தை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ள தவறிவிட்டார்கள்.

செச்னியாவில் ரஷ்யாவும், ஜிஞ்சியாங் உய்கூரில் சீனாவும் முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு, அவர்களை வேட்டையாடும் வேளையிலும் இந்திய கம்யூனிஸ்டுகள் கண்களை மூடிக் கொண்டார்கள்.

அரபு ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக வீசிய போராட்ட சூறாவளி முற்றிலும் ஜனநாயகரீதியிலாகும். அதில் இஸ்லாமிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், செக்குலரிஸ்டுகள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் பங்கேற்றனர். அவர்கள் எல்லாம் ஏகாதிபத்தியத்திற்கு சேவை புரிபவர்கள் என கூறினால், அது சத்தியத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.

புரட்சியின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக பூர்த்திச் செய்த துனீசியா, எகிப்து மக்கள், தற்காலிக ஆட்சியாளர்கள் நடத்திய சுதந்திர தேர்தலில் அவர்களின் விருப்பத்தை சுதந்திரமாக பதிவு செய்தபொழுது அது இஸ்லாமிய கட்சிகள் ஆதரவான முடிவாக மாறியது. இந்நிலையில், இஸ்லாமிய கட்சிகளை குறித்த தவறான புரிதல்களை களைந்துவிட்டு, ஏன் இஸ்லாமிஸ்டுகள் அரபு மக்களின் உள்ளங்களை கவர்ந்தார்கள்? என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்டுகள் ஆய்வு செய்திருக்க வேண்டும்.

ஒரு புறம் இஸ்லாத்தின் இறைத் தூதர்களை சித்தாந்தவாதிகளாகவும், விடுதலைப் போராளிகளாகவும் சித்தரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த இறைத் தூதர்களை உண்மையாக பின்பற்றுவோரின் விடுதலைப் போராட்டங்களை இடதுசாரி எதிர்ப்பாகவும், ஏகாதிபத்தியத்தின் மீதான பாசமாகவும் சித்தரிப்பதில் மிகுந்த முரண்பாடு உள்ளது.

அரபு மக்களை ஈர்க்கும் வண்ணம் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் அமையாமல், ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான வெகுஜன போராட்டங்களை ஆதரிப்பதிலும் இடது சாரிகளுக்கு ஏற்பட்ட தோல்விக்கு  இஸ்லாமியவாதிகள் காரணம் அல்லர். இல்லாத இடதுசாரிகளை உருவாக்குவது அவர்களின் பணியும் அல்ல.

எகிப்தில் அண்மையில் நடந்த தேர்தலில் பெரும் மக்கள் ஆதரவை பெற்ற முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமான இஃவானுல் முஸ்லிமீனை அறுபது ஆண்டுகளாக அடக்கி ஒடுக்கிய கமால் அப்துல் நாசர் மற்றும் அவரது வாரிசுகளான ஆட்சியாளர்களின் தோழர்களாகத்தான் அங்குள்ள கம்யூனிஸ்டுகள் செயல்பட்டார்கள் என்பதை இந்திய கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இவ்வளவு அடக்கு முறைகளையும், சித்திரவதைகளையும் தாங்கி மக்களின் மனதில் இடம்பெற்றுள்ள இஃவானுல் முஸ்லிமீன் எடுத்த உடனேயே இஸ்லாமிய ஆட்சி என்பதற்கு பதிலாக மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு அரசை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளதையும் இந்திய மார்க்சிஸ்டு அறிவுஜீவிகள் மறந்துவிடக் கூடாது.

மாற்றம் இல்லாதது ‘மாற்றம்’ மட்டுமே என நம்பும் கம்யூனிஸ்டுகள், அரத பழசான தங்களின் முழக்கங்களை இன்னும் மாற்ற முயவில்லை என்பதையே அவர்களது வரைவு தீர்மானம் எடுத்து இயம்புகிறது!

அ.செய்யது அலீ.

************************* *************************** *******************************

அனைத்து விமர்சன கட்டுரைகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

தூது ஆன்லைன் கட்டுரைகள் அனைத்தையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top