You are here
Home > Uncategorized > ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்! – பாப்புலர் ஃப்ரண்ட்

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்! – பாப்புலர் ஃப்ரண்ட்

சென்னை: “ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து தடைகளை உடைத்தெறிந்து போராடும்” என்று பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாஈல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது:

கடந்த 26-10-2004 அன்று கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் என்ற சிறிய கிராமத்தில் நடைபெற்ற கைகலப்புப் பிரச்னை ஒன்று தமிழகத்தில் பெரும் பரபரப்புக்குள்ளாக்கப்பட்டது. சொந்தப் பிரச்னை காரணமாக இரு தரப்பினருக்கு இடையில் நடந்த மோதலை ஒரு தீவிரவாத செயலாக சித்தரித்த அப்போதைய கடலூர் மாவட்ட எஸ்.பி. பிரேம் குமார், இதில் சம்பந்தம் இல்லாமல் பாப்புலர் ஃப்ரண்டின் முன்னோடி இயக்கமான மனித நீதிப் பாசறையை இணைத்து மனித நீதிப் பாசறையின் பணிகளை முடக்க பெரும் முயற்சியினை மேற்கொண்டார்.

மனித நீதிப் பாசறை ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடும் பேரியக்கமாகும். அக்காலகட்டத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மீது போலி வழக்குகள், மனித உரிமை மீறல்கள் சர்வ சாதாரணமாக அரங்கேற்றப்பட்ட சமயத்தில்தான் மனித நீதிப் பாசறை பாதிக்கப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்காக ஜனநாயக ரீதியில் குரல் கொடுத்து வந்தது.

மனித உரிமை மீறல்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும், பாதி்க்கப்பட்டவர்களுக்கான சட்ட உதவிகளையும் செய்து வந்தது. இந்நிலையில்தான் மனித நீதிப் பாசறையின் சேவைகளை முடக்கும் எண்ணத்தில் ஒரு கிராமத்தில் நடந்த கைகலப்பை காரணமாக வைத்து மனித நீதிப் பாசறையை முடக்க பெரும் சிரத்தைகளை மேற்கொண்டது மாவட்ட காவல்துறை.

நெல்லிக்குப்பம் கிராமத்தில் முஸ்லிம்களின் வீடுகளில் அத்துமீறி நுழைந்து பெரும் பீதியை ஏற்படுத்தி கையில் சிக்கியவர்களை எல்லாம் கைது செய்தனர்.

இவ்வழக்கில் 3 பெண்கள் உட்பட 26 நபர்களை கைது செய்யப்பட்டார்கள். நீண்ட நாட்களாக நடைபெற்ற இவ்வழக்கு இறுதியில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது போதிய ஆதாரம் இல்லாத நிலையில் இவ்வழக்கினை விசாரித்த கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் அனைவரையும் விடுவித்தது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளை நசுக்க காவல்துறையினர் மேற்கொள்ளும் அதிகார துஷ்பிரோயக செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து தடைகளை உடைத்தெறிந்து போராடும் என்று இத்தருணத்தில் மீண்டும் பதிவு செய்கிறது.

இவ்வாறு பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாஈல் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Top