You are here
Home > Uncategorized > எண்டோ ஸல்பான்:இடைக்கால தடையை விதித்தது உச்சநீதிமன்றம்

எண்டோ ஸல்பான்:இடைக்கால தடையை விதித்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்தான எண்டோ ஸல்பானுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்துள்ளது. ஏனைய அனைத்தையும் விட மனித உயிர் முக்கியம் வாய்ந்தது எனக்கூறிய உச்ச நீதிமன்றம் எண்டோ ஸல்பானுக்கு ஏழு வார கால இடைக்கால தடையை விதித்துள்ளது.

அரசியல் சட்டம் 21-ஆம் பிரிவின்படி வாழ்வதற்கும் செயல்படுவதற்குமான குடிமக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கும் விதமாக எண்டோஸல்பான் தயாரிப்பும், உபயோகமும் இடைக்காலத்திற்கு தடை விதித்துள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா தலைமையிலான டிவிசன் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

எண்டோஸல்பான் தயாரிப்பாளர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வல்லுநர் குழுவின் அறிக்கை வந்த பிறகு எண்டோஸல்பான் தடையைக் குறித்து பரிசீலிக்கலாம் என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகளான எஸ்.ஹெச்.கபாடியா, கெ.எஸ்.ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் எண்டோஸல்பானுக்கு இடைக்கால தடையை விதித்தது.

தடைக்காலமான ஏழுவாரத்திற்குள் எண்டோஸல்பான் மனிதர்களுக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுத் தொடர்பான வல்லுநர்குழுவின் ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டுமென இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்சின் இயக்குநருக்கும், விவசாயத்துறை கமிஷனருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது இந்திய கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்சும், மத்திய விவசாய அமைச்சகமும் இரண்டு வெவ்வேறான ஆய்வுக் குழுக்களை நியமித்துள்ளன. இடைக்கால அறிக்கை கிடைத்த பிறகு எண்டோஸல்பானுக்கு தடை விதிக்கும் பொழுது தற்போது கையிருப்பாக இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அழிப்பதுக்குறித்தும் எண்டோஸல்பானுக்கு பதிலான பூச்சிக்கொல்லி மருந்தைக் குறித்தும் தெரிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொதுநல மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Top