You are here
Home > Uncategorized > உளவு நிறுவனங்கள் குறித்து விமர்சனம்:ஆம்னஸ்டி இந்தியாவுக்கான நிதியுதவியை நிறுத்திய மத்திய உள்துறை அமைச்சகம்!

உளவு நிறுவனங்கள் குறித்து விமர்சனம்:ஆம்னஸ்டி இந்தியாவுக்கான நிதியுதவியை நிறுத்திய மத்திய உள்துறை அமைச்சகம்!

புதுடெல்லி:சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனலின் இந்திய பிரிவுக்கான நிதியுதவியை மத்திய உள்துறை அமைச்சகம் தடுத்து வைத்துள்ளது.3.10 கோடி ரூபாய் நிதியுதவியை அமைச்சகம் தடுத்துநிறுத்தியுள்ளது.

இந்திய உளவுத்துறை ஏஜன்சிகளை மனித உரிமை மீறல்களின் பெயரால் பல வேளைகளில் ஆம்னஸ்டி விமர்சித்து வந்தது.இந்நிலையில் உளவுத்துறை ஏஜன்சிகளின் அறிக்கையின் பெயரால் அவ்வமைப்புக்கான நிதியுதவையை மத்திய உள்துறை அமைச்சகம் தடுத்து வைத்துள்ளது.

அதேவேளையில் ஒரு லட்சம் பவுண்ட் நிதியுதவி வாக்குறுதி அளித்த பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் குசுமா ட்ரஸ்ட் மீது அமெரிக்காவில் மோசடி வழக்கு நடப்பதால் நிதியுதவியை தடுத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆம்னஸ்டிக்கு ஃபாரின் காண்ட்ரிப்யூஷன் ரெகுலேஷன் ஆக்ட் ரிஜிஸ்ட்ரேசன் இல்லாததால் வெளிநாட்டு நிதியுதவியை பெற, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவை.2010-11 வருடங்களில் அளித்த விண்னப்பத்தைத் தொடர்ந்து ஆம்னஸ்டி இண்டர்நேசனல் இந்திய பிரிவு  லண்டன் தலைமையகத்தில் இருந்து 2011-ஆம் ஆண்டு 2 லட்சம் பவுண்ட் நிதியுதவியை பெற்றது.

இந்நிலையில் 2012-ஆம் ஆண்டிற்கான நிதியுதவியை பெற விண்ணப்பித்தபோது மத்திய உள்துறை அமைச்சகம் இந்த எதேச்சதிகார நடவடிக்கையை எடுத்துள்ளது.விண்ணப்பத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ஐ.பி மற்றும் ராவுக்கு அளித்தது.

இந்தியாவைச் சார்ந்த அனுராக் தீக்ஷித் நிறுவிய குசுமா ட்ரஸ்ட், பெரிய அளவில் வரிச் சலுகை வழங்கும் ஜிப்ரால்டரில் பதிவுச்செய்துள்ளதாகவும், தீக்ஷித் மீது அமெரிக்காவில் மோசடி வழக்கு இருப்பதாகவும் இந்திய உளவுத்துறை அமைப்புகள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்தன.

ஆனால், குசுமா ட்ரஸ்ட் கல்வி தொடர்பாகவே பணியாற்றுவதாகவும், ஆம்னஸ்டியுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் உளவுத்துறை ஏஜன்சிகளின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

ஆனால் மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களில் மனித உரிமை பாடங்களை கற்பிக்கும் நோக்கத்தை ஆதரிப்பதால் ஆம்னஸ்டிக்கு நிதி வழங்க குசுமா ட்ரஸ்ட் முன் வந்தது என்று, ட்ரஸ்டின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Top