You are here
Home > கட்டுரைகள் > உலக மக்கள் தொகை தினம்

உலக மக்கள் தொகை தினம்

குரோஷியாவில் கடந்த 1987-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பிறந்த மதேஜ் காஸ்பர் எனும் குழந்தையின் மூலம் உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. இந்த நினைவைப் போற்றும் விதத்தில் எல்லா வருடமும் ஜூலை மாதம் 11 ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் 200 கோடி மக்கள் வசித்திருந்த பூமி நூற்றாண்டின் இறுதியில் 600 மக்களாக மாறியது. இப்பொழுது மக்கள் தொகை 689 கோடியை தாண்டியுள்ளது. உலக மக்கள் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் எட்டு கோடி மக்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பின்(UNFPA)  புள்ளிவிபரம் கூறுகிறது.

சர்வதேச வறுமைக்கோடு அளவீட்டின்படி தினமும் 1.25 டாலர் வருமானம் இல்லாதவர்கள் வறுமையில் உழல்பவர்கள் என்பதாகும். இவ்வாறு 140 கோடி பேர் உலகளாவிய அளவில் வறுமையில் வாடுவதாக கணக்கிடப்படுகிறது. வேர்ல்ட் இன்ஸ்ட்யூட் ஆஃப் எக்கணாமிக்ஸ் ஆய்வின் படி 90 கோடி பேர் பசியை அடக்காமலேயே தினமும் வாழ்க்கையை கழிக்கின்றனர். ஒவ்வொரு ஆறு செகண்டிலும் ஒரு குழந்தை ஊட்டச்சத்துக் குறைவினால் மரணமடைவதாக ஆக்‌ஷன் எய்ட் இண்டர்நேசலின் பிரச்சாரக்குழுவினர் கூறுகின்றனர்.

இன்னொரு புள்ளிவிபரத்தின்படி உலகில் ஆறுபேரில் ஒருவர் உணவுக்கு வழியில்லாமல் அவதியுறுகிறார். உலக மக்கள் தொகையில் பெரும்பாலோர் வசிப்பது வளர்ச்சியடையாத நாடுகளிலாகும். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருவருக்கு சுத்தமான நீரும், நான்கில் ஒருவருக்கு இருப்பிடமும், ஆரம்ப கல்வியும் கிடைப்பதில்லை. உலக உணவுத்திட்டத்தின் புள்ளிவிபரப்படி 200 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றார்கள்.

உலகில் காணப்படும் அனைத்துவிதமான துயரங்களுக்கும், வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுத்திட்டங்களின் தடைகளுக்கும் காரணமாக கூறப்படுவது மக்கள் தொகை பெருக்கமாகும். வேலையின்மை, உணவு பற்றாக்குறை, சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் சீர் கேடு, காடுகள் அழிப்பு போன்றவற்றால் ஏற்படும் வாழ்க்கைச் சீர்கேடுகள் இதன் விளைவான நோய், வறுமை, எழுத்தறிவின்மை, அறிவின்மை போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதே ஒரே வழி என்ற பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானதாகும். வளர்ச்சியடையாத-ஏழ்மை நாடுகளில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்களின் பின்னணியில் ஐரோப்பிய-அமெரிக்க காலணியாதிக்க விருப்பம் அடங்கியுள்ளதை மறுக்கவியலாது.

பூமியில் வாழும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாகவோ, காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாகவோ வறுமை உருவாகவில்லை. மாறாக உணவு சேமிப்பு முழுவதையும் செல்வந்தர்கள் உபயோகிப்பதும், கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் வறுமையை உருவாக்குவதாக பிரபல அமெரிக்க விஞ்ஞானி டாக்டர்.சூஸன் ஜார்ஜ் கூறுகிறார். மேற்கத்திய முதலாளித்துவத்துவ வர்க்கத்தின் ஊனமான, சுய நலமிக்க உணவு கொள்கைகளே பட்டினி சாவுகளுக்கு காரணம். ஆகவே பட்டினி சாவுகளை ஒழிக்க மக்கள் தொகையை கட்டுப்படுத்தி எவ்வித பயனும் இல்லை என அவர் தனது ஆய்வறிக்கையில் வேண்டுகோள் விடுக்கிறார்.

உலகத்தில் வாழும் மக்களுக்கு தேவையான வளங்கள் உற்பத்திச்செய்யப்படுவதாகவும், அவற்றின் விநியோகம் நீதியின் அடிப்படையிலும், விஞ்ஞானப்பூர்வமாகவும் இல்லாததுதான் பிரச்சனைக்கு காரணமென பெர்னாட் கிலண்ட், ரோஜன் வெல் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். வறுமைக்கு முக்கிய காரணம் வளங்களின் தவறான விநியோகமாகும் என நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் சுட்டிக்காட்டியுள்ளார். வளர்ச்சியடைந்த நாடுகளின் செல்வமும், ஊதாரித்தனமும் ஒரு புறம், வளர்ச்சியடையாத ஏழ்மை நாடுகளின் வறுமையும், பட்டினியும் மறுபுறம் – இவ்வாறு உலகம் நகர்ந்து செல்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில் உலகம் வருமானத்திலும், முன்னேற்றத்திலும் வரலாறு பார்த்திராத அளவுக்கு முன்னேறியுள்ளது. தொழில் நுட்பமும், பொருளாதார சக்தியும் இத்தகைய முன்னேற்றத்திற்கு ஆக்கம் ஊட்டின. ஆனாலும் 140 கோடி மக்கள் வறுமையில் உழல்பவர்களாக ஏழை நாடுகளில் வாழ்ந்துவருகின்றனர்.

உலகில் 20 சதவீதத்திற்கு கீழே உள்ள பணக்கார நாடுகள் 80 சதவீத வளங்களை பயன்படுத்தும்போது ஏழை நாடுகளைச் சார்ந்த உலகின் 80 சதவீத மக்களுக்கு 20 சதவீத வளங்களே கிடைக்கிறது.

கேடுகெட்ட அரசியல் ஆதாயங்களுக்காக செயல்படும் மேற்கத்திய பணக்கார வர்க்கம்தான் மக்கள் தொகை கட்டுப்பாட்டு செயல்திட்டங்களின் பின்னணியில் செயல்படுவதாக அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை மேற்கோள்காட்டி எலிசபத் லியாஜின்ஜின் எழுதிய ‘எக்ஸஸிவ் ஃபோர்ஸ்’ என்ற நூல் கூறுகிறது.

ஆகவே, மக்கள் தொகை பெருக்கம் வறுமைக்கு காரணமில்லை.பொருளாதார, சமூக, அரசியல் பிரச்சனைகளுடன் தொடர்புடையதுதான் வறுமை. மக்கள் தொகை வளர்ச்சி எச்சூழலிலும் உலகை வீழ்ச்சியடையச்செய்யாது. உலகின் அரசியல், சமூக, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவது மக்கள் தொகை பெருக்கமாகும். மக்கள் தொகை பெருகியதன் காரணமாகவே மனிதனின் சிந்தனையும் வளர்ச்சியடைந்தது. பல்வேறு தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் மக்கள்தொகை பெருக்கம் தடையாக மாறியது என கருதி ரஷ்யா போன்ற நாடுகள் மக்கள் தொகை கட்டுப்பாட்டை மேற்கொண்டதன் விளைவை தற்போது அனுபவித்து வருகின்றன.இதன் விளைவாக அதனை மறுபரிசீலனை செய்யும் முடிவுக்கு அந்நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.

பொருளாதார வளங்கள் அகிலங்களையெல்லாம் படைத்து பரிபாலித்து வரும் வல்ல இறைவனால் வளங்கப்பட்டவை என்பதை புரிந்து அதனை விநியோகிக்கும் முறையை இறைக்கட்டளையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தினால் இன்று உலகில் நிலவும் வறுமையும், பட்டினியும் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும்.

திருக்குர்ஆன் கூறுகிறது:

”அல்லாஹ் தான் உங்களைப் படைத்தவன், அவனே உணவு வழங்குகிறான்”(அல்குர்ஆன் 30:40).

“(இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 14:34)

”…பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.”(அல்குர்ஆன் 2:36)

”…உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது…”(அல்குர்ஆன் 59:7)

அனைத்து பிரச்சனைகளுக்கும் மக்கள்தொகை பெருக்கத்தின் மீது பழியை போட்டுவிட்டு அறிவுக்கு திரையிடுவதை நிறுத்துவோம். ஆக்கப்பூர்வமான வழிகளில் நம் சிந்தனையை செலுத்துவோம்.

.செய்யது அலீ.

Leave a Reply

Top