You are here
Home > Uncategorized > இஸ்ரேல் சிறைகளில் கூட்டு உண்ணாவிரதம்​!

இஸ்ரேல் சிறைகளில் கூட்டு உண்ணாவிரதம்​!

ராமல்லா:இஸ்ரேல் அரசின் மனிதநேயமற்ற நடவடிக்கைகளை கண்டித்து இஸ்ரேலிய சிறைகளில் ஃபலஸ்தீன் கைதிகள் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

மேற்கு கரையிலும், காஸ்ஸாவிலும் கைதிகளின் தினமாக நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. சிறைக் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஃபலஸ்தீனில் பெரும்பாலான நகரங்களில் போராட்டமும், பொதுக் கூட்டமும் நடந்தன.

சிறைக் கைதிகளின் தினம் முன்னரே அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. 1200க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். காலையில் அதிகாரிகள் உணவை வழங்க வந்தபொழுது, தாங்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பதாக ஃபலஸ்தீன் கைதிகள் தெரிவித்தனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பெண் ஃபலஸ்தீன் கைதிகள் எட்டுபேர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

மேற்குகரையின் நப்லூஸில் பேரணி நடத்திய மக்கள் மத்தியில் ஃபலஸ்தீன் சிறைக் கைதிகள் கிளப்பின் தலைவர் காதுரா ஃபரஸ் உரை நிகழ்த்தினார். எதிர்பார்த்ததை விட அதிகமான கைதிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார்.

குற்றம் சுமத்தாமல், விசாரணைச் செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலைச் செய்தல், தனிமைச் சிறையை ஒழித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஃபலஸ்தீன் கைதிகள் முன்வைக்கின்றனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை கைதிகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று காதுரா கூறினார்.

4700 ஃபலஸ்தீன் மக்கள் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 319 பேர் நிர்வாக ரீதியான கைது(administrativearrest) என்ற பெயரில் கொடுமையை அனுபவிப்பதாக ஃபலஸ்தீன் சிறை விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. குற்றம் சுமத்தாமல் சிறையில் அடைத்ததை கண்டித்து 66 தினங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஃபலஸ்தீன் சமூக ஆர்வலர் காதர் அத்னானை இஸ்ரேல் நேற்று விடுதலைச் செய்வதாக முன்னர் அறிவித்திருந்தது.

மத்திய நப்லூஸில் உயிர் தியாகிகள் சதுக்கத்தில் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. சிறைக் கைதிகளின் புகைப்படங்களை உயர்த்திப் பிடித்தவாறு பெரும்பாலான நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

ராமல்லாவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. ஆஃபர் சிறைக்கு முன்னால் மக்கள் தர்ணா நடத்தினர். தனிமைச் சிறையை ஒழிக்கவேண்டும் என்பது ஹெப்ரான் நகரில் திரண்டவர்களின் முழக்கமாகும்.

துல்க்காரம், கார்கிலியாஆகிய இடங்களில் 2000 பேர் வீதம் கலந்துகொண்ட போராட்டம் நடந்தது. காஸ்ஸாவில் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூடாரம் கட்டிய செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகத்தில் இருந்து பேரணி துவங்கியது.

இஸ்ரேல் சிறையில் 50 தினங்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் 10 ஃபலஸ்தீன் கைதிகளில் நான்குபேர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

Leave a Reply

Top