You are here
Home > Uncategorized > இஷ்ரத் போலி என்கவுண்டர்:பாண்டே சிறையில் அடைப்பு!

இஷ்ரத் போலி என்கவுண்டர்:பாண்டே சிறையில் அடைப்பு!

அஹ்மதாபாத்:2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் அநியாயமாக போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பி.பி.பாண்டே சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

குஜராத் மாநில கூடுதல் டி.ஜி.பியான பி.பி.பாண்டேவின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்த கூடுதல் முதன்மை ஜுடிஸியல் மாஜிஸ்ட்ரேட், அவரை ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.பாண்டேவை 14 தினங்கள் விசாரணைக்கு தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள மனுவின் மீதான விசாரணை இன்று நடக்கும்.

2004-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி அஹ்மதாபாத் நகர இணை கமிஷனராக பி.பி.பாண்டே பதவி வகித்தபோது இஷ்ரத் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் அநியாயமாக போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்யபப்ட்டனர்.இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க ஆரம்பித்த உடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பாண்டே தலைமறைவாக இருந்தார்.முதல் தகவல் அறிக்கையில் தனது பெயரை விடுவிக்கவும், முன் ஜாமீன் கேட்டும் பாண்டே சமர்ப்பித்த பல்வேறு மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடிச் செய்யப்பட்டன.இவரை நீதிமன்றம் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தது.இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி சி.பி.ஐ நீதிமன்றம், பாண்டேவுக்கு எதிராக பிடிவாரண்டை பிறப்பித்தது.

அரசு பணியாளர் என்ற நிலையில் பாண்டேவுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன்பு சி.பி.ஐ, அரசின் அனுமதியை பெறவில்லை என்றும் பாண்டேவின் வழக்கறிஞர் வாதாடினார்.ஆனால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 197-ஆம் பிரிவு அதிகாரப்பூர்வ பணியை சரியாக நிறைவேற்றும் அதிகாரியை பாதுகாப்பதற்கான பிரிவாகும்.ஆனால், நான்கு பேரை சதித்திட்டம் தீட்டி படுகொலைச் செய்த சம்பவம் எவ்வாறு அதிகாரப்பூர்வ பணியை சரியாக நிறைவேற்றியதாக அமையும்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது

பாண்டேவை தவிர குஜராத் போலீஸில் ஆறு அதிகாரிகள் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Top