You are here
Home > Uncategorized > இஷ்ரத் தீவிரவாதி என்ற குற்றச்சாட்டின் பின்னணியில் ஐ.பி!

இஷ்ரத் தீவிரவாதி என்ற குற்றச்சாட்டின் பின்னணியில் ஐ.பி!

புதுடெல்லி: போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்ட இஷ்ரத் ஜஹானை தீவிரவாதியாக அறிவித்து உள்துறை அமைச்சகம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ததன் பின்னணியில் செயல்பட்டவர் முன்னாள் ஐ.பி சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் என்று சி.பி.ஐ தெரிவித்துள்ளது.இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் படுகொலை தொடர்பான துணை குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ இதனை தெரிவித்துள்ளது. இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் படுகொலைக் குறித்த இரண்டு மாறுபட்ட பிரமாணப் பத்திரங்களை உள்துறை அமைச்சகத்தில் அன்றைய அண்டர் செகரட்டரி ஆர்.வி.எஸ்.மணி தாக்கல் செய்தார். இஷ்ரத்தும், இதர 3 நபர்களும் தீவிரவாதிகள் என்று 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முதல் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டது. ஆனால், 2009 செப்டம்பர் 30-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் இஷ்ரத் தீவிரவாதி என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டது. 2009 ஆகஸ்ட் 6-ஆம் தேதி பிரமாணப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னணியில் ராஜேந்தர் குமாரின் மூளை செயல்பட்டதாக சி.பி.ஐ தெளிவுப்படுத்தியுள்ளது.

போலி என்கவுண்டர் குறித்து விரிவாக விசாரணை நடத்துவார்களோ? என்று ராஜேந்தர் குமார் பயந்தார் என்றும் சி.பி.ஐ தெரிவிக்கிறது. நீதிமன்ற உத்தரவு ஏதும் இல்லையெனில் இவ்வழக்கில் துணை குற்றப்பத்திரிகையை இறுதியானதாக அமையும். ஐ.பி மற்றும் குஜராத் போலீஸ் கூட்டாக சதித்திட்டம் தீட்டி இந்த போலி என்கவுண்டர் அரங்கேற்றப்பட்டுள்ளது. இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேர் இதில் பலியாகினர்.

இந்நிலையில் ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் வழக்கில் இரண்டு முன்னாள்  ஐ.பி அதிகாரிகள் மீது சி.பி.ஐ விரைவில் துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உள்ளது. மோடியை கொலைச் செய்ய துபாயில் இருந்து அஹ்மதாபாத்திற்கு ஸாதிக் ஜமால் வந்ததாக போலியான தகவலை அளித்தது மஹராஷ்ட்ரா மாநில ஐ.பி அதிகாரிகள் என்பதை சி.பி.ஐ கண்டறிந்தது.

இவர்கள் மீது இம்மாதமே குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படும் என்று சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இவ்வழக்கில் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் எட்டு குஜராத் போலீஸ்அதிகாரிகளின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Top