You are here
Home > Uncategorized > இலங்கை:29 ஆண்டுகளுக்கு பின் சொந்த கிராமத்தில் குடியேறும் முஸ்லிம்கள்!

இலங்கை:29 ஆண்டுகளுக்கு பின் சொந்த கிராமத்தில் குடியேறும் முஸ்லிம்கள்!

கொழும்பு:மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள இருநூறுவில் கிராமத்திலிருந்து 29 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறிய முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த கிராமத்தில் மீண்டும் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

1985ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிகழ்ந்த இன வன்முறைகளையடுத்து அப்போது அந்த கிராமத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் காத்தான்குடியில் தற்காலிக இருப்பிடங்களில் வசித்து வருகின்றனர்.

1985 ஆண்டில் இருந்து  அவ்வப்போது ஏற்பட்ட இன வன்முறைகள், யுத்தம் மற்றும் அந்த பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமை போன்ற பல்வேறு காரணங்களினால் இந்த குறிப்பிட்ட தொகுதி முஸ்லிம் குடும்பங்கள் அங்கு செல்ல முடியாத சூழல் நிலவியதாக அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது போர் முடிவடைந்த நிலையில் 2011ம் ஆண்டில் இருந்து  ஒரு சில குடும்பங்கள் மீன்பிடி, விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களின் நிமித்தம் அங்கு சென்று தங்கியுள்ளன.

இக் குடும்பங்களின் மீண்டும் சொந்த கிராமத்தில் குடியேறுவது தொடர்பாக ஆராயும் பொருட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில் கூட்டமொன்றை கூட்டி அவர்களது கருத்துக்களை கேட்டபோது அனைத்து குடும்பங்களும் சொந்த கிராமத்தில் மீண்டும் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Top