You are here
Home > Uncategorized > இலங்கையின் நெருங்கிய நண்பர் சுஷ்மா மீனவர்களுக்காக போராடுகிறாராம்! – சுதர்சன நாச்சியப்பன் கிண்டல்

இலங்கையின் நெருங்கிய நண்பர் சுஷ்மா மீனவர்களுக்காக போராடுகிறாராம்! – சுதர்சன நாச்சியப்பன் கிண்டல்

புதுடெல்லி: மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டாடும் பா.ஜ.க.வின் சுஷ்மா சுவராஜ் மீனவர்களுக்காக போராட்டம் நடத்துவது பற்றி கிண்டல் செய்துள்ளார். இது தேர்தல் நாடகம் என விமர்சித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதைக் கண்டித்து மீனவர்களுக்கு ஆதரவாக கடல்தாமரை என்ற போராட்டத்தை ராமேசுவரத்தில் பா.ஜ.க. நடத்தியது. இப்போராட்டத்திற்கு சுஷ்மா சுவராஜ் தலைமை ஏற்றிருந்தார்.

பாஜகவின் இப்போராட்டம் பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மத்திய இணையமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் கூறியதாவது:

இரு நாட்டு மீனவர்கள் பிரச்னை பற்றி சுஷ்மா சுவராஜுக்கு நன்றாகவே தெரியும். அவர் இலங்கை அரசுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொள்ளாதபோதும் ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று இலங்கை சென்று வந்தவர். அந்த அளவுக்கு இலங்கை அரசுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ளவர்.

இப்போது தமிழக மீனவர்களுக்கு உதவுவது போல் தேர்தலுக்காக அவர் ஆடும் நாடகம்தான் இந்தப் போராட்டம். மீனவர்கள் பிரச்னை தொடர்பாக இரு நாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். துறைமுகப் பகுதிகள் தவிர இதர பகுதிகளில் மீன் பிடிக்க ஒப்பந்தம் பேசி இருக்கிறார்கள். அதுவரை இரு நாட்டு அமைச்சர்களோ, அதிகாரிகளோ இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

இந்தப் பிரச்னைக்கு விரைவில் சுமூக உடன்பாடு ஏற்படும். ஆனால் அதை உடைக்க சிலர் முயலுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Top