You are here
Home > கட்டுரைகள் > மீடியா உலகில் முஸ்லிம்கள் > இலக்கியச்சோலை புத்தக வெளியீட்டு விழா

இலக்கியச்சோலை புத்தக வெளியீட்டு விழா

இலக்கியச்சோலை வெளியீட்டகம் ஏறத்தாழ பதினெட்டு வருடங்களாக தரமான புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இது வரை நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் பண்டைய நாவல்களை மீண்டும் வெளியிடும் நோக்கத்திற்காக புதுயுகம் என்ற வெளியீட்டகமும் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

இந்த வெளியீட்டகங்களின் புதிய ஆறு புத்தகங்களை வெளியிடும் விழா சென்னை பெரியார் திடலில் உள்ள மணியம்மை அரங்கில் ஜூன் 14, 2013 அன்று மாலை நடைபெற்றது.

இலக்கியச்சோலை நிர்வாகக் குழு உறுப்பினர் குத்புதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இலக்கியச்சோலையின் பொறுப்பாளர் அஹமது ஃபக்ருதீன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இலங்கையைச் சார்ந்த எழுத்தாளர் லறீனா அப்துல் ஹக் அவர்கள் எழுதிய ‘வார்த்தைகளின் வலி தெரியாமல்’ புத்தகத்தை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ் மாநிலத் தலைவருமான ஃபாத்திமா முஸஃப்பர் அவர்கள் வெளியிட, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநிலப் பொருளாளர் ஜரீனா ஷக்கூர் அவர்கள் பெற்றுக்கொண்டார். குழந்தைகளை வளர்க்கும் முறை, பெற்றோர்கள் குழந்தைகளுடன் பழக வேண்டிய முறை, ஆலோசனை வழங்குவது என அனைத்து விஷயங்களும் இப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதை தன்னுடைய எளிள நடையில் அழகாக எடுத்துரைத்தார் ஃபாத்திமா முஸஃப்பர். இந்தப் புத்தகம் இளம் பெற்றோர்கள் கையில் இருக்க வேண்டிய டிக்ஷனரி என்று முத்தாய்ப்பாக கூறினார்.

தமிழ் எழுத்துலகை தன்னுடைய இனிய எழுத்துக்களால் கட்டிப்போட்ட நாவலர் மர்ஹூம் ஏ.எம். யூசுஃப் அவர்களின் ‘பாலைவனச் சிங்கம் உமர் முக்தார்’, ‘மறைவழி கண்ட மாமன்னர் சேரமான் பெருமாள்’ ஆகிய இரு புத்தகங்களையும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் ஷேக் முஹம்மது தெஹ்லான் பாக்கவி அவர்கள் வெளியிட நாவலர் யூசுஃப் அவர்களின் பேரர் உமர் முக்தார் அவற்றைப் பெற்றுக் கொண்டார். மறுமலர்ச்சி இதழில் தான் படித்த தொடர்களை தற்போது மறுமதிப்பு செய்துள்ள வெளியீட்டகத்தை பாராட்டிய அவர் இப்புத்தங்களை மிகச் சிறந்த வரலாற்றுப் பெட்டகங்கள் என்று தெரிவித்தார்.

ரியாஸ் அஹமது எழுதிய ‘இஸ்ரேலிய உறவின் விபரீதங்கள்’ புத்தகத்தை எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான முத்துகிருஷ்ணன் அவர்கள் வெளியிட முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் தலைவர் மன்சூர் ஹாஜியார் அவர்கள் பெற்றுக்கொண்டார். காஸா நகருக்கு நேரடியாகச் சென்று வந்த முத்துகிருஷ்ணன் தன்னுடைய அனுபங்களைப் பகிர்ந்து கொண்டார். இஸ்ரேல் குறித்து அறிவதற்கு முதல் கீற்றாக இந்நூல்  அமைகிறது என்றும் தெரிவித்தார்.

முஹம்மது நாஸிம் எழுதிய ‘தொடரும் பயணங்கள்’ புத்தகத்தை ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநிலத் தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பயீ அவர்கள் வெளியிட முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனீஃபா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இந்நூல் சுயபரிசோதனை செய்வதற்கு ஏற்ற நூல் என்றும், மதரஸா பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய நூல் என்றும் ஆபிருத்தீன் மன்பயீ அவர்கள் தெரிவித்தார்.

மர்ஹூம் புஹாரீ ஃபாஸீ அவர்கள் எழுதிய ‘குர்ஆன் கூறும் பனீ இஸ்ராயீல்’ புத்தகத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயீல் அவர்கள் வெளியிட மர்ஹூம் புஹாரீ ஃபாஸீ அவர்களின் சகோதரர் மூஸல் காழிம் அவர்கள் பெற்றுக்கொண்டார். புஹாரீ ஃபாஸீ அவர்களுடான நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட மாநிலத் தலைவர், யூதர்களின் குணாதிசியங்களை இந்நூல் தெளிவாக விளக்குவதாக தெரிவித்தார்.

இலக்கியச்சோலை நிர்வாகக் குழு உறுப்பினர் ரியாஸ் அஹமதுவின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

புத்தகங்களைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

இலக்கியச்சோலை

25,பேரக்ஸ் சாலை,

பெரியமேடு,சென்னை – 3

தொலைபேசி: 044-25610969

email: ilakkiyacholai@gmail.com

Leave a Reply

Top