You are here

இனிக்கும் இல்லறம் – 13

ஒவ்வொரு நாளும் புதுமையான அனுபவம்!

“சலிப்பாக இருக்கு! ஒரு புதுமையும் இல்லை! என்னடா வாழ்க்கை இது?” – திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த நிலையில் பலரும் உள்ளுக்குள்ளேயே அலுத்துக்கொள்வார்கள். அல்லது தங்களது அங்கலாய்ப்பை பிறரிடம் வெளிப்படுத்துவார்கள்.

நம்மில் பலரும் கற்பனைகளை வளர்த்துக் கொள்கிறோம். திருமணப் பேச்சு எடுக்கும்போது உள்ளுக்குள்ளே ஒரு சிலிர்ப்பு எல்லோருக்கும் உருவாகும். அதன் பின்னர் திருமண ஏற்பாடுகள், திருமணம், விருந்துகள், வைபோகங்கள், சுற்றுலா என திருமணம் முடிந்து முதல் சில மாதங்கள் தித்திப்பாக கழியும்.

ஆனால், இந்தத் தித்திப்பும், இன்பமும் வாழ்க்கை முழுவதும் நிலவ வேண்டும் என்று நாம் விரும்புவோமானால் அங்கேதான் நாம் தவறிழைக்கிறோம் என்று பொருள். இல்லற வாழ்க்கை என்பது ஒரு தொலைக்காட்சி சீரியல் அல்ல. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு சூழல்களின் ஊடே நகர்ந்து செல்வதே இல்லற வாழ்க்கை.

உணர்வுகளும், சிந்தனைகளும், விருப்பங்களும் எல்லாம் மாற்றத்திற்கு உட்பட்டதே. எப்பொழுதும் ஒரே நிலை தொடர முடியாது. பொறுமை, அர்ப்பணிப்பு, தியாகம், மாற்றங்களைக் குறித்த ஆவல், எதிர்பார்ப்பு – இவையெல்லாம் இல்லற வாழ்விற்கு கட்டாயம் தேவை!

சலிப்பும், அயர்ச்சியும் தோன்றும் தம்பதியினரில் சிலர் சில வேளைகளில் அவசரமான முடிவை எடுத்து விடுகின்றனர். திருமணம் முடிந்து ஓரிரு ஆண்டுகளில் இந்நிலை ஏற்பட்டால் விவாகரத்து! பல ஆண்டுகள் தாண்டினால் குழந்தைகள், குடும்பச் சூழலைக் கருதி விவாகரத்து எண்ணத்தைக் கைவிடுவார்கள்.

ஆனால்  வீட்டுக்குள்ளே குழாயடிச் சண்டை நடக்கும்! குழந்தைகளுக்கும் நிம்மதியிருக்காது. மொத்தத்தில் குடும்ப அமைதி காணாமல் போகும். சரியான தீர்வுதான் என்ன? வாழ்க்கையைக் குறித்த நல்ல சிந்தனை கொண்ட, இறைவன் மீது அச்சம் கொண்டவர்கள் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழும்.

அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் இல்லற வாழ்க்கையில் அறிந்தும் அறியாமலும் நடந்த தவறுகளை பரஸ்பரம் சீர்திருத்தி, உறவுகளை சீராக்கி வாழ்க்கையை தொடர்ந்து நடத்திச் செல்ல உறுதியான முடிவை எடுக்க வேண்டும். கடந்த கால இனிமையான நினைவுகள் நிகழ்கால வாழ்க்கைக்கு உந்து சக்தியாக மாறும் வகையில் இருவருடைய அணுகுமுறைகளும் அமையவேண்டும்.

இல்லற வாழ்க்கையில் சலிப்பும், அயர்ச்சியும், மந்த நிலையும் மாற பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது எப்பொழுதும் ஒரே கேள்வி, ஒரே பதில் என்ற  ரீதியை மாற்றுதல். பணியாற்றும் இடங்கள், அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து பணி முடித்து வீடு திரும்பி மனைவியை சந்திக்கும்போது,’என்ன செய்தி?’, ‘விசேஷம் ஏதேனும் உண்டா?’, ‘பிள்ளைகளெல்லாம் சாப்பிட்டார்களா?’, ‘பிள்ளைகள் படித்தார்களா?’  உள்ளிட்ட கேள்விகள்தாம் வழக்கமாக ஒரு கணவனின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள்.

இதே கேள்வி பதில் சம்பிரதாயம் தொடரும்போது சலிப்பும், அயர்ச்சியும் இல்லற வாழ்க்கையில் ஏற்படுவது இயல்பே. காலையில் எழுந்தால் சமையல் கட்டில் பரபரப்பு. பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு தயார் செய்து அனுப்பவேண்டும். கணவர் பணி இடம் செல்ல தயாரிப்புகளை செய்ய வேண்டும்.

காலை வேலைகள் முடிந்த பின்னர் சோர்வு மேலிட ஒரு குட்டித் தூக்கம்! பின்னர் எழுந்து தொலைக்காட்சியில் சீரியல். மதிய உணவுக்கான தயாரிப்பு. குளித்தல், துணிகளைத் துவைத்தல். மீண்டும் தூக்கம் அல்லது தொலைக்காட்சியை நாடுதல். மாலையில் மீண்டும் குழந்தைகள், கணவர் என பரபரப்பு. இரவு உணவு தயாரிப்பு. சற்று இடைவெளி கிடைத்தால் தொலைக்காட்சி சீரியல். தூக்கம் என்று ஒரு நாள் அப்படியே கழிந்துவிடுகிறது.

வேலை நாட்களில் இதுவே ஒரு குடும்பத் தலைவியின் செயல்பாடுகளாக இருந்தால் காலம் செல்லச் செல்ல சலிப்பு ஏற்படத்தான் செய்யும். அதற்காக கணவருக்கும், பிள்ளைகளுக்கும் செய்யும் கடமைகளைச் செய்யாமல் விடுவதா என்ற கேள்வி எழலாம்.

கட்டாயம் செய்ய வேண்டும்! ஆனால், ஒரே போல கடமைகளைச் செய்யாதீர்கள். பாணியை சற்று மாற்றுங்கள். ஓய்வு கிடைக்கும்போது சிந்தியுங்கள். காலை உணவாக வாரம் முழுவதும் இட்லியை சமைத்தால் குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்படும் என்று நாம் தெரிந்துதானே வைத்திருக்கிறோம்.

உணவில் கடைப்பிடிக்கும் மாற்றத்தை இதர விஷயங்களிலும் கடைப்பிடித்தால்தான் என்ன?உரையாடல்களில் புதிய தாளத்தையும், சுருதியையும் கண்டுபிடியுங்கள். வீட்டில் நுழைந்த கணவரை சோகத்துடனும், கடுப்பான முகத்துடனும் எதிர்கொள்வதை மனைவி தவிர்க்க வேண்டும். கூட்டுக் குடும்பத்துடன் வாழும்போது சில குறைபாடுகள் இருக்கலாம், குற்றச்சாட்டுக்களும் எழலாம். அவற்றையெல்லாம் கணவனிடம் முறையிட்டு அவருடைய நிம்மதியை இழக்கச் செய்தால் பிரச்னை இன்னமும் அதிகமாகும்.

அதைப் போலவே அலுவலகத்திலோ, பணி புரியும் இடங்களிலோ பல்வேறு பிரச்னைகளை சந்தித்தாலும் வீட்டிற்கு வரும்போது அந்த எரிச்சலையெல்லாம் மனைவியிடம் காட்டினால் வீட்டில் கிடைக்கும் நிம்மதியும் பறிபோகும். வீட்டில் நுழைந்தவுடன் தம்பதியினர் தங்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள இடமளிக்க வேண்டும். பிறரைக் குறித்த விசாரணைகளும், குற்றச்சாட்டுகளும் எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு இன்முகத்துடன் வரவேற்க கற்றுக்கொள்ளுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மதி)

அனைவரையும் விட சிறந்த பெண்மணியின் பண்பாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட பண்புகளில் ஒன்று, “தன் கணவன் தன்னைப் பார்க்கும்போது அவனை மகிழ்விப்பவள்” என்பதாகும். (நூல்: நஸயீ ஹதீஸின் ஒரு பகுதி)

உள்ளத்தை குளிர வைக்கும் வார்த்தைகளை தம்பதியினர் பரிமாறிக் கொள்ள வேண்டும். “இன்று என்னவென்றே தெரியவில்லை. அலுவலக நேரம் முழுவதும் உன் ஞாபகம்தான். வீட்டை நிர்வகிக்க நீ எவ்வளவு சிரமப்படுகிறாய் என்பது எனக்கு தெரியும். உனக்கு ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறேன்” என்று கணவனும், “அல்ஹம்துலில்லாஹ்! எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்கள் வீடு வந்து சேரும் வரை என் நெஞ்சில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறேன். சீறிப் பாயும் வாகனங்களுக்கு மத்தியில் நீங்கள் பாதுகாப்பாக வீடு வந்து சேர வேண்டுமே என்று பிரார்த்திக்கொண்டே இருந்தேன். நீங்கள் வந்து சேர்ந்தீர்களல்லவா! இப்போதுதான் எனக்கு சமாதானம் ஏற்பட்டது” என்று மனைவியும் கூறினால் அந்தச் சூழல் எப்படியிருக்கும்?

இதுபோல சந்தர்ப்பம், சூழலைக் கருத்தில்கொண்டு பல்வேறு வகையான வார்த்தைகளை பரிமாறிக் கொள்ள வேண்டும். வார்த்தைகளுக்கா பஞ்சம்? வீட்டில் நுழையும்போதே புகாரையும், அங்கலாய்ப்பையும், தேவைகளின் பட்டியலையும் சமர்ப்பிக்கும் பழைய பாணியை கைவிடுங்கள். புதிய பாணிகளை கடைப்பிடியுங்கள். வாழ்க்கையில் சோர்வும், அலுப்பும் காணாமல் போகும். ஒரு பிடிமானம் ஏற்படும்.

மேலும் குடும்பத்துடன் மாதமொருமுறையோ, விடுமுறை நாட்களிலோ சுற்றுலா, குடும்ப சந்திப்புகள், பழைய நண்பர்களைச் சந்தித்தல் போன்றவற்றை கடைப்பிடிக்கலாம். வாழ்க்கையில் அலுப்பும், சோர்வும் ஏற்படும் தம்பதியினர் முதலில் ஒன்றாக அதிகாலை எழுந்து தஹஜ்ஜுத் தொழுவதை கடைப்பிடியுங்கள். குறைந்தது வாரம் ஒருமுறையேனும் கடைப்பிடிக்கலாம். வாழ்க்கைக்கு புதிய அர்த்தம் உருவாகும். அல்லாஹ்வின் அடியார்களுடைய பிராத்தனைகளில் ஒன்றாக திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

“…எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியினரிடமும் இருந்து எங்களுக்கு கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!…” (அல்குர்ஆன் 25:74)

வெறும் பவுதீக வாழ்க்கையைக் குறித்தே சிந்திக்காமல் ஆன்மீகத்தின் பக்கமும் கவனம் செலுத்த வேண்டும். வீட்டுப் பணிகளில் ஈடுபடுவது சிரமமாக இருப்பதாக கூறி ஒரு பணிப் பெண்ணை நியமிக்க தனது அன்பு மகள் ஃபாத்திமா (ரலி) கோரிக்கை வைத்தபோது நபி (ஸல்) அவர்கள் அளித்த அறிவுரை என்ன? ஸுப்ஹானல்லாஹ் 33, அல்ஹம்துலில்லாஹ் 33, அல்லாஹு அக்பர் 34 தடவை கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் உபதேசித்தார்கள்.

இது ஒரு பணிப் பெண்ணிற்கு மாற்று ஆகாது என்பது நபி (ஸல்) அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், தன் மகளின் மனநிலையில் மாற்றம் வந்தால் எல்லாம் சரியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கருதியிருக்கலாம். நமது மனநிலையை மாற்ற வேண்டும். அப்பொழுது அலுப்பும், சோர்வும் காணாமல் போகும்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

அ. செய்யது அலீ

 

Leave a Reply

Top