You are here
Home > Uncategorized > இந்தியா > ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 12-ம் தேதி இரவுக்குள் திரும்பி வரவும்!

ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 12-ம் தேதி இரவுக்குள் திரும்பி வரவும்!

நுங்கம்பாக்கத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், “நேற்று அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணிநேரத்தில் புயலாக வலுவடைந்து மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து 14 ஆம் தேதி இரவு வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதியை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக 14-ம் தேதி மாலையிலிருந்து வட கடலோரத் தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 12-ம் தேதி இரவுக்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நேற்று குமரிக்கடல் மற்றும் இலங்கை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று சற்று வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது மாலத்தீவு, குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வருகிறது.

இதன்காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என புவியரசன் தெரிவித்தார்

Leave a Reply

Top