You are here
Home > Uncategorized > ஆபாசபடம்:நடவடிக்கை எடுக்க கோரிய காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றம்!

ஆபாசபடம்:நடவடிக்கை எடுக்க கோரிய காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றம்!

காந்திநகர்:சட்டப்பேரவைக்குள் டாப்லெட்டில் ஆபாச படம் பார்த்த இரண்டு பா.ஜ.க எம்.எல்.ஏக்களை அவையில் இருந்து வெளியேற்றக்கோரி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பா.ஜ.க எம்.எல்.ஏக்களான சங்கர்சவுத்ரி, ஜெதா பர்வத் ஆகியோர் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் ஆபாச படத்தை டாப்லெட்டில் பார்த்துக் கொண்டிருந்தனர். இக்காட்சியை தனது மொபைல் ஃபோனில் பதிவுச்செய்த குஜராத் மூத்த பத்திரிகையாளர் ஜானக் தவே, சட்டசபை சபாநாயகரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் குஜராத் சட்டசபை நேற்று பகல் 12 மணிக்கு துவங்கிய போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தார்த் படேல் மற்றும் இக்பால் படேல் ஆகியோர், சபையில் ஆபாச படம் பார்த்த, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இருவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும், என்றனர். உடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்ற எம்.எல்.ஏ.,க்களும், இதே கோரிக்கையை விடுத்தனர். பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஆபாச படம் பார்த்ததாக வெளியான செய்தி இடம் பெற்றிருந்த பத்திரிகையையும் சபையில் காட்டினர். சபையில் பத்திரிகையை காட்ட அனுமதி இல்லை என, சபாநாயகர் கூறியும், அதை யாரும் கேட்கவில்லை. அத்துடன் தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, சபையை ஒரு மணி நேரத்திற்கு சபாநாயகர் கன்பத் வாசவா ஒத்திவைத்தார்.

ஒரு மணி நேர ஒத்திவைப்புக்கு பின் மீண்டும் சட்டசபை கூடிய போது, ஆபாச படம் பார்த்ததாக புகார் கூறப்பட்ட பா.ஜ., எம்.எல்.ஏ., சங்கர் சவுத்ரி தன் விளக்கத்தை அளிக்க முயன்றார். ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று, அவருக்கு எதிராக கோஷமிட்டனர். சிலர் பேப்பர்களையும் கிழிந்து எறிந்தனர். இதையடுத்து, குஜராத் சட்டசபை விவகாரத் துறை அமைச்சர் பிரதீப்சின் ஜடேசா, விதி எண் 52ன் கீழ், தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில், சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்த, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரியிருந்தார். தீர்மானம் ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. உடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற, சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், அவையை விட்டு வெளியே காங்கிரஸ் உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் பலம் பிரயோகித்து வெளியேற்றப்பட்டனர். தங்களின் கோரிக்கைக்கு இதுவரை சபாநாயகர் பதில் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் சித்தார்த் பட்டேல் சுட்டிக்காட்டினார்.

பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இருவர் ஆபாச படம் பார்த்த விவகாரம் தொடர்பாக, சட்டசபையின் உரிமை மீறல் கமிட்டி, விசாரணை நடத்தும் என, சபாநாயகர் கன்பத் வாசவா உத்தரவிட்டுள்ளார். மேலும், எம்.எல்.ஏ., சங்கர் சவுத்ரியின் டேப்ளட் கம்ப்யூட்டரை பறிமுதல்செய்து, அதை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பும்படியும், சட்டசபை செயலாளரை  கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல் சட்டத்தின் 194வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளை எம்.எல்.ஏ.,க்கள் மீறியுள்ளதாக தெரிவதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

******************* ************************ ************************

அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Top