You are here
Home > Uncategorized > ஆந்திராவில் ரெயில்கள் மோதல்: 25 பேர் பலி!

ஆந்திராவில் ரெயில்கள் மோதல்: 25 பேர் பலி!

ஹைதராபாத்:ஆந்திர மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயிலில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 25 பேர் பலியாகியுள்ளனர். 25 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஹூப்ளியில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஹம்பி எக்ஸ்பிரஸ் அதிகாலை 3.45 மணி அளவில் விபத்தில் சிக்கியது. ஏராளமானோர் ரெயிலில் சிக்கியிருப்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஹம்பி எக்ஸ்பிரஸ் அனந்தபூருக்கு அருகே பெனுகோண்டா ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் சென்று மோதியது. சரக்கு ரெயிலில் மோதிய ஹம்பி எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இதில் எஞ்சினுடன் இணைந்த பெட்டி தீப்பிடித்தது. இந்த பெட்டியில் 46 பயணிகள் இருந்தனர். இவர்களில் சிலர் ரெயில் பெட்டி தீப்பிடித்ததால் தீயில் கருகி இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இவர்களை பெட்டியில் இருந்து மீட்க முடியவில்லை.

மீட்புப்பணிகள் உடனடியாக நடைபெறாதது மரண எண்ணிக்கை அதிகரிக்க காரணமானதாக பெனுகோண்டா டெபுட்டி போலீஸ் சூப்பிரண்ட் கூறினார்.

ஸ்டீல் பெட்டியை உடைத்து உள்ளே செல்ல கியாஸ் கட்டருகள் கிடைக்காததால் பெட்டிக்குள் நுழைய முடியவில்லை என்று அவர் கூறினார்.

கியாஸ் கட்டர்களுடன் மீட்பு படையினர் வந்த பிறகே ரெயில் பெட்டிக்குள் சிக்கிய பயணிகளை மீட்க முடிந்தது. அதிகாலை நான்கு மணியளவில் விபத்து நடந்ததால் மீட்பு பணிக்கு தேவையான வெளிச்சமும் இல்லை. இதுவும் மீட்புப்பணிக்கு இடையூறாக மாறியது.

விபத்துக் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய ரெயில்வே அமைச்சர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட இருக்கிறார். மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாயும், கடுமையான காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பி எக்ஸ்பிரஸின் அதிக வேகமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. ஆனால், விசாரணை நடந்துவருவதாகவும், அதற்கு முன்பே விபத்துக்கான காரணம் குறித்து குறிப்பாக எதுவும் கூற இயலாது என ரெயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Top