You are here
Home > Uncategorized > ஆதாயம் தரும் மேலும் 2 பதவி! – பிரணாப்பின் வேட்புமனுவை பரிசீலனை செய்ய மீண்டும் கோரிக்கை

ஆதாயம் தரும் மேலும் 2 பதவி! – பிரணாப்பின் வேட்புமனுவை பரிசீலனை செய்ய மீண்டும் கோரிக்கை

டெல்லி:குடியரசு தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக  போட்டியிடும் பிரணாப் முகர்ஜி, மேலும் இரண்டு ஆதாயம் தரும் பதவிகளில்  வகிப்பதாகவும், எனவே ,அவரது வேட்பு மனுவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும்  சங்மா தரப்பினர்,   தலைமை தேர்தல்  ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி, ஆதாயம் தரும் பதவியான,  இந்திய புள்ளியல் நிறுவன தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து அளிக்கப்பட்ட  கடிதம் போலியானது என்று சங்மா தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராஜினாமா கடிதத்தில் உள்ள பிரணாப் முகர்ஜியின் கையெழுத்து போலியானது என்றும்,  எனவே அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் குடியரசு தலைவர்  தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பிரணாப்பின் மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டு விட்டார்.

இந்நிலையில் பிரணாப் முகர்ஜி, மேலும் 2 ஆதாயம் தரும் பதவிகளில்  இருப்பதாகவும், அந்தப் பதவிகளை அவர் ராஜினாமா செய்யவில்லை என்றும் சங்மா  சார்பாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உள்ளிட்ட மூவர் குழு, தலைமை  தேர்தல் ஆணையரை இன்று சந்தித்து இரண்டு தனித்தனி புகார் மனுக்களை அளித்தனர்.

அந்த மனுக்களில், “குடியரசு தலைவர் வேட்பாளரான பிரணாப் முகர்ஜி, பிர்பும் என்ஜினீயரிங்   மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி துணைத் தலைவரகாவும், ரவீந்திரநாத் பாரதி  பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்ட  ரவீந்திர பாரதி சொசைட்டியின்  தலைவராகவும்  பதவி வகித்து வருகிறார். இவை இரண்டும் ஆதாயம் தரும்  பதவிகள் ஆகும்.

இந்த பதவிகளை இன்னும் அவர் ராஜினாமா செய்யவில்லை. இதன் மீது விசாரணை  நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குடியரசு தலைவர் தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலரான மாநிலங்களவை செயலர்  மீதும் அதிருப்தி தெரிவித்து அவர்கள் மனு அளித்தனர்.

இதனிடையே புகார் மனு அளித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய  சாமி, “பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் இரண்டு பதவிகளில் இருந்து வருகிறார். தேர்தல் நடத்தும் அதிகாரியின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. எனவே, தலைமை  தேர்தல் ஆணையரை சந்தித்து எங்களின் அதிருப்தியை தெரிவித்தோம்.

நாங்கள்  எழுப்பியுள்ள பிரச்னை மோசடி சம்பந்தப்பட்டது. அதாவது, மோசடி  கையெழுத்து தொடர்பானது.வேட்பு மனுவில் மோசடி நடைபெற்றுள்ளதா? என்று தேர்தல்  கமிஷன்  விசாரணை நடத்தி முடிவு செய்ய வேண்டும்.நாங்கள் இப்போது அளித்துள்ள  புதிய புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார்.

பிரணாப்புக்கு எதிரான இந்த 2 புகார் மனுக்களால் அவருக்கு மீண்டும் தலைவலி  ஏற்பட்டுள்ளது. அதே சமயம் பிரணாப் தரப்பில் இது குறித்து இதுவரை விளக்கம் எதுவும்  அளிக்கப்படவில்லை.

Leave a Reply

Top