You are here
Home > Uncategorized > அஸ்ஸாம்:சி.பி.ஐ மேலும் 7 வழக்குகளை விசாரிக்கும்!

அஸ்ஸாம்:சி.பி.ஐ மேலும் 7 வழக்குகளை விசாரிக்கும்!

புதுடெல்லி:அஸ்ஸாம் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஃபோடோலாண்ட் முன்னணி எம்.எல்.ஏ பிரதீப் பிரம்மாவுக்கு எதிரான வழக்கு உள்பட மேலும் 7 வழக்குகளின் விசாரணை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்படும். கலவரம் தொடர்பான 7 வழக்குகளை சி.பி.ஐ தற்பொழுது விசாரித்து வருகிறது.

ஏ.கே.47 துப்பாக்கியுடன் எம்.எல்.ஏ கலவரத்திற்கு தலைமை தாங்கினார் என்ற சாட்சியங்களின் அடிப்படையில் பிரம்மாவை போலீஸ் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆளுங்கட்சியான காங்கிரஸின் கூட்டணி கட்சியான போடோலாண்ட் மக்கள் முன்னணியின் எம்.எல்.ஏதான் பிரதீப் பிரம்மா.

பிரம்மா மீதான வழக்கு உள்பட 7 வழக்குகளை சி.பி.ஐ வசம் விசாரணை நடத்த ஒப்படைப்பது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் தீர்மானித்துள்ளன. மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொக்ராஜர் நகருக்கு அருகே டோட்டோமாவில் பிரம்மாவின் வீட்டில் வைத்து போலீஸார் அவரை கைது செய்தனர். குற்றகரமான சதித்திட்டம், சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல், கலவரம், திருட்டு ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரதீப் பிரம்மாவின் கைதைத் தொடர்ந்து போடோலாண்ட் மக்கள் முன்னணி(பி.பி.எஃப்) உறுப்பினர்கள் ரெயில்வே போக்குவரத்திற்கு இடையூறுச் செய்தனர்.

கலவரத்தைத் தொடர்ந்து 340 மறுவாழ்வு மையங்களில் 4,85,921 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெறும்வரை காலவரையற்ற பந்த் தொடரும் என்று பி.பி.எஃப் மிரட்டல் விடுத்துள்ளது.

Leave a Reply

Top