You are here
Home > Uncategorized > அயர்லாந்தை வெளியேற்றி காலிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா

அயர்லாந்தை வெளியேற்றி காலிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா

கொல்கத்தா: அயர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 131 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 புள்ளிகளுடன் “பி’ பிரிவில் இருந்து முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது. ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள அயர்லாந்து அணியின் காலிறுதி கனவு முடிவுக்கு வந்தது.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில், பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று, கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த “பி’ பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற அயர்லாந்து கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு, “பீல்டிங்’ தேர்வு செய்தார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, கேப்டன் ஸ்மித் ஜோடி துவக்கம் அளித்தது. தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ஆம்லா 17 பந்தில் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட ஸ்மித் (7), மூனேவின் துல்லிய துரோவில் “ரன்-அவுட்’ ஆனார். அதிரடியாக ஆடிய வான் விக், 41 பந்தில் 42 ரன்கள் எடுத்திருந்த போது, ஜார்ஜ் டாக்ரெல் பந்தில் போல்டானார். இந்தியாவுக்கு எதிராக அரைசதம் கடந்து எழுச்சி கண்ட “ஆல்-ரவுண்டர்’ காலிஸ் (19), இம்முறை சோபிக்கவில்லை. அடுத்து வந்த டு பிளசிஸ் (11) ஏமாற்றினார்.
பின் இணைந்த டுமினி, கோலின் இங்ராம் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அயர்லாந்து பந்துவீச்சை அருமையாக கையாண்ட இந்த ஜோடி அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தியது. ஆறாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த போது, ஜான்ஸ்டன் பந்தில் போல்டான இங்ராம் (46) அரைசத வாய்ப்பை கோட்டைவிட்டார். தொடர்ந்து அபாரமாக ஆடிய டுமினி, 103 பந்தில் ஒரு சிக்சர், 6 பவுண்டரி உட்பட 99 ரன்கள் எடுத்து, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. போத்தா (21) அவுட்டாகாமல் இருந்தார். அயர்லாந்து சார்பில் ரான்கின், ஜான்ஸ்டன், மூனே, டாக்ரெல், ஸ்டிர்லிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

மார்கல் மிரட்டல்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி, மார்கல் வேகத்தில் திணறல் துவக்கம் கண்டது. இவரது பந்தில், கேப்டன் போர்டர்பீல்டு (6), ஸ்டிர்லிங் (10) உள்ளிட்ட துவக்க ஜோடி சொற்ப ரன்களில் வெளியேறியது. அடுத்து வந்த நெய்ல் ஓபிரையன் (10), ஜாய்ஸ் (12) ஏமாற்றம் அளித்தனர். இதனால் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்து திணறியது.
பீட்டர்சன் துல்லியம்:
பின் களமிறங்கிய வில்சன், கெவின் ஓபிரையன் ஜோடி சிறிது நேரம் தாக்குப் பிடித்தது. இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்த போது கெவின் ஓபிரையன் (19), ராபின் பீட்டர்சன் சுழலில் சிக்கினார். அதே ஓவரில் எல்.பி.டபிள்யு., முறையில் வில்சன் (31) வெளியேறினார். அடுத்து வந்த ஜான்ஸ்டன் (12), மூனே (14), டாக்ரெல் (16) பெரிய அளவில் சாதிக்கவில்லை.
அயர்லாந்து அணி 33.2 ஓவரில் 141 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்கா சார்பில் மார்கல், ராபின் பீட்டர்சன் தலா 3, காலிஸ் 2, போத்தா, டுமினி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக தென் ஆப்ரிக்காவின் டுமினி தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

Top