You are here
Home > Uncategorized > அமீரகத்தில் SDPI-ன் அகில இந்திய தலைவருக்கு EIFF நடத்திய மாபெரும் வரவேற்பு விழா

அமீரகத்தில் SDPI-ன் அகில இந்திய தலைவருக்கு EIFF நடத்திய மாபெரும் வரவேற்பு விழா

துபாய்:சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) அகில இந்திய தலைவர் இ.அபூபக்கர் அவர்களின் அமீரக வரவையொட்டி அவருக்கு கடந்த 21.10.11 வெள்ளியன்று மாபெரும் வரவேற்பு விழா நடத்தப்பட்டது.

எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்த விழா அல் கிஸைஸில் கல்ஃப் மாடல் ஸ்கூலில் நடைபெற்றது.

 

EIFFன் அமீரகத் தலைவர் நாஸர் ஹுசைன் (கர்நாடகா) அவர்கள் விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

இரவு 7 மணியளவில் துவங்கிய இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த சகோ.அப்துல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் இ.அபூபக்கர் அவர்களையும், அவருடன் வந்திருந்த SDPI-ன் தேசிய பொதுச் செயலாளர்கள் ஹாஃபிஸ் மன்சூர் அலீ கான், முஹ்யித்தீன் குட்டி ஃபைஸி ஆகியோரையும், கலந்துகொண்ட அனைவரையும் அவர் வரவேற்றுப் பேசினார்.

அடுத்ததாக, EIFFன் அமீரகத் தலைவர் நாஸர் ஹுசைன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அதன்பிறகு SDPIன் தேசிய பொதுச் செயலாளர் முஹ்யித்தீன் குட்டி ஃபைஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்.

 

இவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர். அடுத்த மாதம் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெறவிருக்கும் மாபெரும் சமூக நீதி மாநாடு குறித்து அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

சமூக நீதி மாநாடு நடத்தப்படுவதற்கான காரணத்தை விலாவாரியாகக்  குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் தலித்துகளும், சிறுபான்மையினரும் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாவதைக் கூறினார். மேலும் அவர் குறிப்பிட்ட சமூகங்களுக்கெதிராக அரசு இயந்திரங்கள் இயங்கி வருவதைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.

அடுத்ததாக, SDPIன் தேசிய பொதுச் செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலீ கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

வட இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் குறிப்பிட்ட அவர், அநீதம் இழைக்கப்படும் சமூகங்களுக்கு நீதி வழங்க வேண்டியே இந்தச் சமூக நீதி மாநாட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்துகிறது என்று குறிப்பிட்டார்.

அடுத்ததாக, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும், சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) அகில இந்திய தலைவருமான இ.அபூபக்கர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் கோவை, நெல்லை ஆகிய கார்ப்பரேஷன் வார்டுகளில் தலா ஒரு இடம் உட்பட SDPI கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதை தனது உரையின் துவக்கத்தில் அவர் கூறினார்.

வட இந்தியாவில் முஸ்லிம்களும், இதர பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடியின மக்களும் அனுபவித்து வரும் துன்பங்களைக் குறிப்பிட்டார் அவர். இராஜஸ்தானில்  உள்ள மேவாத்தி முஸ்லிம்களிடம் சென்றிருந்த பொழுது ஒரு முதியவர் தன் கையைப் பிடித்து, “நாங்கள் 63 வருடங்களாக உங்களுககாகத்தான் காத்திருந்தோம்” என்று நெகிழ்வுடன் கூறியதை நினைவு கூர்ந்தார்.

தலித் சமூகத்தை சேர்ந்த மாயாவதி ஆளும் உத்திரப் பிரதேசத்தில் 19 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ஆனால் அரசு அதிகாரங்களில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். சச்சார் கமிட்டி போன்ற அரசே நியமித்த கமிஷன்கள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று கூறிய பிறகும் அதனை இன்று வரை கண்டுகொள்ளாத மத்திய அரசு பெண்களுக்கு பாராளுமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு கொடுப்பதற்கு பரிசீலித்து வருகிறது. படித்த மேல்தட்டு உயர்ஜாதி பெண்களைப் பாராளுமன்றத்திற்குள் கொண்டு வருவதற்கான திட்டமே இது.

பா.ஜ.க. பல ஊழல்களைச் செய்துள்ளது. ஆனால் ஊழலுக்கெதிராக குரல் கொடுப்பது போல் இன்று நாடகம் ஆடுகிறது. அவர்கள் செய்துள்ள ஊழலுக்கு நவீன சாட்சிதான் கர்நாடகாவின் எடியூரப்பா. இன்று அவர் ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். SDPI அனைவருக்குமான கட்சி. இது முஸ்லிம்கள், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் அனைவருக்குமான கட்சி. அனைவருக்கும் பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் விடுதலை வாங்கிக் கொடுப்பதே அதன் இலட்சியம்.

1992-ல் பாபரி மஸ்ஜித் இடிப்பையொட்டி மாபெரும் கலவரம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். 2002ல் குஜராத்தில் மிகப் பெரிய இனப்படுகொலை நடத்தப்பட்டது. 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அடுத்ததாக 2012ல் மிகப்பெரிய கலவரங்களை நடத்துவதற்கு ஃபாசிசக் கும்பல்கள் திட்டம் தீட்டி வருகின்றன. அதற்கு முன்னோடியாக இப்பொழுது வட இந்தியாவில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறு சிறு கலவரங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. இதில் போலீஸ் ஒருதலைப்பட்சமாக நடந்து  முஸ்லிம்களைக் குறி வைத்து சுடுகிறது.

இராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் கோபால் கர் என்ற இடத்தில் 10 அப்பாவி முஸ்லிம்களை போலீஸ் சுட்டுக் கொன்றது மட்டுமல்லாமல் முஸ்லிம் உடல்களை இழுத்துச் சென்று தீயில் போட்டு பொசுக்கி பேயாட்டம் போட்டது. இந்த அக்கிரமங்களுக்கெதிராக அனைவரும் ஒன்று திரளவேண்டும். SDPI அதற்காகவே பாடுபட்டு வருகிறது. அதன் கரத்தை அனைவரும் வலுப்படுத்த வேண்டும்.’

இவ்வாறு அவர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

இறுதியாக, கேரளாவைச் சார்ந்த சகோ. ஃபைஸல் அவர்கள் நன்றியுரை நவின்றார்.

 

நிகழ்ச்சியில் 2000-க்கும் அதிகமான மக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். EIFF இந்த நிகழ்ச்சிக்கு விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.  அதன் தன்னார்வத் தொண்டர்கள் அனைத்துப் பணிகளையும் கச்சிதமாகச் செய்தனர்.

Leave a Reply

Top