You are here
Home > Uncategorized > அப்ரூவராக மறுத்ததற்காக ஆறு மாதம் சிறைவாசம் அனுபவித்த பீர் முஹ்யித்தீன்!

அப்ரூவராக மறுத்ததற்காக ஆறு மாதம் சிறைவாசம் அனுபவித்த பீர் முஹ்யித்தீன்!

பெங்களூர்: பெங்களூர் பா.ஜ.க. அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட 3 முக்கிய நபர்களில் ஒருவர் பீர் முஹ்யித்தீன்.

ஆனால், நீதிமன்றத்தில் எந்தவொரு ஆதாரமும் சமர்ப்பிக்கப்படாததால் 6 மாதம் கழித்து கடந்த 29-ஆம் தேதி நீதிமன்றம் இவரை விடுதலை செய்தது.

தனக்கு எதிராக போலீஸ் வசம் ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றாலும் அப்ரூவராக மாற மறுத்ததைத் தொடர்ந்து சிறையில் கடுமையான மன ரீதியான சித்திரவதையை அனுபவிக்க நேர்ந்தது என்று பீர் முஹ்யித்தீன் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சார்ந்த முஹ்யித்தீன் கடந்த 7 ஆண்டுகளாக பெங்களூர் டானெரி சாலையில் தேயிலை வியாபாரம் செய்து வருகிறார்.

சகோதரியின் திருமணத்திற்காக சென்னையில் கடையில் இருந்து பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கும்போது கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி (பெங்களூர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த மறு நாள்) சாதாரண உடையில் வந்த போலீஸ் பீர் முஹ்யித்தீனையும், அவரது மனைவியின் சகோதரர் பஷீரையும் கைது செய்தது.

இது குறித்து பீர் முஹ்யித்தீன் கூறியதாவது:

நள்ளிரவு வரை எங்களிடம் விசாரணை நடத்தி விட்டு கர்நாடகா போலீசிடம் ஒப்படைத்தனர். ஏப்ரல் 19-ஆம் தேதி எங்களை பெங்களூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அப்பொழுதுதான் பா.ஜ.க. அலுவலகக் குண்டுவெடிப்பு வழக்கில் எங்களைக் குற்றவாளிகளாக சேர்த்ததை புரிந்து கொண்டோம். அதுவரை பன்னா இஸ்மாயீல் என்பவரைக் குறித்து போலீஸ் விசாரித்தது (பன்னா இஸ்மாயீலுக்கு எதிராகவும் ஆதாரங்களை இதுவரை போலீஸ் ஆஜராக்கவில்லை).

நான் “தெரியாது” என்று கூறினேன். நான் ஒரு போதும் பன்னா இஸ்மாயீலை சந்திக்கவில்லை. மனைவியின் சகோதரனின் மொபைல் சிம் கார்டை இஸ்மாயீல் உபயோகித்தார் என்றும் நான் அந்த எண்ணில் அழைத்ததுதான் என்னைக் கைது செய்யக் காரணம் என்பதையும் பின்னர் நான் தெரிந்து கொண்டேன்.

கர்நாடகா போலீஸின் கஸ்டடியில் இருந்த ஒரு மாதம் காலம் பயங்கரமாக இருந்தது. கால் மற்றும் கைகளில் சங்கிலியைக் கட்டி எங்களை சென்னையில் இருந்து பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.

குண்டுவெடிப்பில் பங்குண்டு என்பதை எங்களிடம் ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தினர். நான் மறுத்தபோது, “பன்னா இஸ்மாயீலையாவது தெரியும் என்று கூறு” என்று நிர்பந்தித்தனர்.

3 தினங்களாக சித்திரவதை செய்தனர். பின்னர் எனக்கு எதிராக ஆதாரம் எதுவும் இல்லை என்பதை தெரிந்தபோது, தங்களது ஒரு கோரிக்கையை நிறைவேற்றினால் விடுதலை செய்கிறோம் என்று போலீஸ் தெரிவித்தது.

பன்னா இஸ்மாயீல் ஒரு பைக்கில் வந்து பச்சை நிறத்திலான பையை நான் இருக்கும் இடத்தில் வைத்து விட்டுச் சென்றதாக மாஜிஸ்ட்ரேட் முன்னால் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறினர்.

ஆனால், நான் அதனை பொருட்படுத்தவில்லை. உடல் ரீதியாக கடுமையான சித்திரவதைகளை அனுபவிக்காவிட்டாலும், சிறையிலும், போலீஸ் காவலிலும் மன ரீதியான சித்திரவதை கடுமையாக அனுபவிக்க நேர்ந்தது.

கடுமையாக நிராசையடைந்து, “முஸ்லிம் என்பதா நான் செய்த குற்றம்?” என்று ஒரு முறை போலீஸை நோக்கி நான் கேட்டேன். “ஆம்” என்று பெங்களூர் சிட்டி க்ரைம் ப்ராஞ்ச் அதிகாரி பதில் அளித்தார்.

“பாகிஸ்தானுக்கு போய் விடு” என்றும் அவர்கள் ஆக்ரோஷத்துடன் கூறினர். முதலில் 20 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்ட சிறை அறையில் நான் உள்பட 11 பேரை அடைத்திருந்தனர்.

பின்னர் மற்றொரு சிறை அறைக்கு மாற்றினர். சிறை அறையில் இருந்து ஒருபோதும் எங்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இனி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு திட்டமும் இல்லை. 10லட்சம் ரூபாய் வியாபாரத்தில் முதலீடு செய்திருந்தேன். அந்தப் பணம் முழுவதும் இழக்கப்பட்டது. பெங்களூரில் தொடருவதா, சொந்த ஊருக்கு திரும்புவதா என்பது குறித்து தீர்மானிக்க முடியவில்லை.

இவ்வாறு பீர்முஹ்யித்தீன் கூறினார்.

Leave a Reply

Top