You are here
Home > தொடர்கள் > அண்ணலாரின் கேள்வியும், அன்சாரிகளின் பதிலும்

அண்ணலாரின் கேள்வியும், அன்சாரிகளின் பதிலும்

ஹுனைன் யுத்தம் நடந்தபொழுது முஸ்லிம்களுக்கு நிறைய கனீமத் பொருட்கள் கிடைத்தன. அந்தப் பொருட்களைப் பங்கீடு செய்யாமல் அதனைப் பாதுகாப்பதற்கு ஏற்பாடு செய்து விட்டு அண்ணலார் முஹம்மத்(ஸல்) அவர்கள் தாயிஃப் நோக்கி தங்கள் படையுடன் புறப்பட்டார்கள்.

திரும்பி வரும்பொழுது முஸ்லிம் படை ஜிஃரான் என்னும் இடத்தை அடைந்தது. போரில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் அங்கேதான் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. பொருட்களைக் கணக்கெடுப்பதற்காக அண்ணலார் ஆளை நியமித்தார்கள்.

கணக்கெடுப்புக்குப் பின் அந்தப் பொருட்கள் அனைத்தும் ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டன. அதில் ஒரு பங்கின் உரிமை அண்ணலாருக்குரியது. தங்களுக்குக் கிடைத்த பங்கை அண்ணலார் அப்பொழுதே மக்களுக்கிடையில் பங்கிட்டுக் கொடுத்து விட்டார்கள்.

ஆரம்ப காலத்தில் இஸ்லாமை ஏற்று சொல்லொணா துயரங்களை அனுபவித்த ஏராளம் நபித்தோழர்கள் அண்ணலாருடன் இருந்தார்கள். பொருட்களைப் பங்கிடும் பொழுது தங்களுக்கு கணிசமான பங்குகள் கிடைக்கும் என்று நியாயமாக அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அண்ணலார் இந்தத் தடவை கருத்தில் கொண்டது அவர்களையல்ல. முஸ்லிம்களுடன் போர் செய்து தோற்று, அதிகாரம் அத்தனையும் இழந்து நிர்கதியான நிலையில் நிறைய பிரமுகர்கள் மக்காவில் இருந்தார்கள். அவர்களெல்லாம் பூரண மனதுடன் இஸ்லாத்திற்குள் வரவில்லை. அவர்களின் மனநிலையையும், எதிர்பார்ப்பையும் புரிந்து வைத்திருந்தார்கள் அண்ணலார்.

எனவே இந்தத் தடவை அவர்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள். 100 ஒட்டகங்களும், நிறைய தங்கமும் அபூஸுஃப்யானுக்குக் கிடைத்தன. ஹகீம் இப்னு ஹுஸாம் (ரலி) என்பவருக்கும் அதே அளவில் அண்ணலார் வழங்கினார்கள். ஹகீம் திருப்தியடையவில்லை என்றறிந்த பொழுது இன்னும் கொடுத்தார்கள்.

அண்ணலார் அவரிடம் இவ்வாறு கூறினார்கள்: “பொருள் என்பது இருதயமும், இனிப்பும் போன்றது. நல்லெண்ணத்தோடு அதனை அணுகுகிறவர்களுக்கு அது அருளாக மாறும்.

பேராசைப்படுபவர்களுக்கு அது ஒருபோதும் திருப்தியளிக்காது. எவ்வளவு சாப்பிட்டாலும் பசியடங்காதவனைப் போல் அவன் இருப்பான். கொடுக்கும் கை வாங்கும் கையை விடச் சிறந்தது.”

ஒரு கொட்டகை முழுவதும் ஒட்டகங்களும், ஆடுகளும் நிறைந்து நின்றிருந்தன. அதனை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் ஸஃப்வான் இப்னு உமய்யா(ரலி). இதனைக் கவனித்த நபிகளார் (ஸல்) அவர்கள் அவரிடம் இவ்வாறு கேட்டார்கள்: “என்ன, உங்களுக்கு அது வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?”

அவர் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவேயில்லை. ஸஃப்வான் விக்கித்து நின்றார். பின்னர் சொன்னார்: “நிச்சயமாக அதனை யார்தான் ஆசைப்படாமல் இருப்பார்கள்?”

ஸஃப்வான் சிறிதும் எதிர்பார்க்காத பதில் அண்ணலாரிடமிருந்து வந்தது: “அப்படியானால் அவை முழுவதையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.”

புதிய விசுவாசிகளிடம் அண்ணலார் இப்படி நடந்துகொண்ட விதத்தை அன்சாரிகள் கூடிக்கூடிப் பேசிக் கொண்டனர். அவர்களில் ஒருசிலர் இப்படிக் கூறினார்கள்: “இறைத்தூதர் இப்பொழுது அவர்களின் சொந்தக்காரர்களுக்கே அனைத்தையும் கொடுக்கிறார்கள்.”

இதனைக் கேட்ட ஸஅத் இப்னு உபாதா (ரலி) உடனே இறைத்தூதரிடம் இந்தச் செய்தியை அறிவித்தார்கள்.

“நீர் என்ன நினைக்கிறீர்?” என்று அண்ணலாரிடம் ஸஅதிடம் கேட்டார்கள். அதற்கு அவர் இவ்வாறு பதில்பகர்ந்தார்: “நானும் என்னுடைய ஆட்களில் உள்ளவன்தானே…”

அன்சாரிகள் அனைவரையும் அழைத்து வருமாறு ஸஅதிடம் அண்ணலார் கூறினார்கள். ஒன்று கூடிய அன்சாரிகளிடம் அண்ணலார் இவ்வாறு உரையாற்ற ஆரம்பித்தார்கள்:

“அன்சாரிகளே, போரில் கிடைத்த பொருட்களைப் பங்கு பிரித்துக் கொடுத்த விஷயத்தில் உங்களுக்கு திருப்தியில்லை என்று நான் அறிந்தேன். அது நியாயம்தான். ஆனால் சில விஷயங்களை நான் எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் வழி தவறி வாழ்ந்த சமயத்தில்தான் நான் உங்களிடம் வந்தேன். என் மூலம் அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி நல்கினான். வறியவர்களான உங்களை அல்லாஹ் வளப்படுத்தித் தந்தான். உங்களுக்குள் பகைவர்களாக இருந்தீர்கள். அல்லாஹ் என் மூலம் உங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தினான். சரிதானே…?”

அன்சாரிகள் கூறினார்கள்: “மிகச் சரி. நாங்கள் அதற்காக உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.”

அண்ணலார் தொடர்ந்தார்கள்: “நீங்கள் என்னிடம் கூறலாம். சொந்த மக்கள் உதறித் தள்ளிய உங்களை நாங்கள் அரவணைத்துக் கொண்டோமல்லவா…  எந்த உதவியும் இல்லாமல் வந்த உங்களுக்கு அபயம் அளித்தோமல்லவா… இப்படி நீங்கள் கேட்டால் அது மிகச் சரியே. நான் அதனைச் சம்மதிக்கிறேன். இருந்தாலும் அன்சார் சமூகமே, மக்கள் ஆடு, மாடுகளுடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போகும் பொழுது, அல்லாஹ், அல்லாஹ்வின் தூதர் ஆகியோருடன் நீங்கள் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போவதை நீங்கள் விரும்பவில்லையா?”

அன்சாரிகள் ஒரே குரலாகச் சொன்னார்கள்: “எங்களுக்கு அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் போதும்.”

எம்பெருமானார்(ஸல்) அவர்களை எண்ணிப் பார்க்கும் இந்த வேளையில் அண்ணலாரின் கேள்வியும், அன்சாரிகளின் பதிலும் மிகச் சிறப்பு வாய்ந்தது. பலத்தின் மொழியையும், பணத்தின் மொழியையும் மட்டுமே புரிகின்ற இந்தக் காலகட்டத்தில் இந்த உலகம் இந்தச் சம்பாஷணையை உட்கொள்ளுமா?

Leave a Reply

Top